தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரை புதன் பொது மறைக்கல்வியுரை  (Vatican Media)

புனித பூமியின் கப்பர்நாகுமிற்கு திருத்தந்தைக்கு அழைப்பு

திருப்பீடத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கலிலேயாவிலுள்ள கப்பர்நகும் மற்றும், ஏனைய புனித இடங்களைப் பார்வையிட திருத்தந்தைக்கு அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான்

செப்டம்பர் 11, இப்புதன் காலை 9.30 மணியளவில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளிடம், தனது 31வது திருத்தூதுப் பயண அனுபவங்களை, பொது மறைக்கல்வியுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக் நாட்டில் அமைதி நிலவ எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து உடனிருந்து ஊக்கமளித் தவருகின்றது என்று கூறினார். அந்நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேதி, கட்சிகளுக்கு இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது பற்றி குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த அமைதிக்கான முயற்சியில், உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு நிறையப்  பணிகளை ஆற்றியுள்ளது, அதற்காக அந்த அமைப்புக்கு நன்றி சொல்வதாகவும் கூறினார்.

கப்பர்நாகுமிற்கு திருத்தந்தைக்கு அழைப்பு

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய, திருப்பீடத்திற்கான இஸ்ரேல் தூதர் Oren David அவர்கள், திருப்பீடத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கலிலேயாவிலுள்ள கப்பர்நகும் மற்றும், ஏனைய புனித இடங்களில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

திருப்பீடத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இஸ்ரேலும், வத்திக்கான் அஞ்சலகமும் இணைந்து வெளியிட்ட தபால்தலை ஒன்றையும் திருத்தந்தையிடம் கொடுத்து, தன் நாட்டிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்ததாக, Oren David அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இச்சந்திப்பில், இஸ்ரேல் அஞ்சல் துறையின் இயக்குனர் Elhanan Shapira அவர்களும், Oren David அவர்களுடன் இருந்தார்.

இந்த தபால்தலையில், புனித பேதுரு பசிலிக்கா பேராலயம், கலிலேயாவின் கப்பர்நாகும் தொழுக்கைக்கூடம், யூதம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையேயுள்ள நெருங்கிய உறவுகள், திருப்பீடத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள உறவுகள் போன்றவை அச்சிடப்பட்டுள்ளன.

டுவிட்டர் செய்தி

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#GeneralAudience) குடன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கிறிஸ்துவே, உலகின் நம்பிக்கை. அவரின் நற்செய்தியே, உடன்பிறப்பு உணர்வு, சுதந்திரம், நீதி, மற்றும் அனைத்து மக்களுக்கும், அமைதியின் மிக சக்திமிக்க புளிக்காரமாகும்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

11 September 2019, 16:03