தேடுதல்

RAI தொலைக்காட்சி மற்றும் வானொலி அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை RAI தொலைக்காட்சி மற்றும் வானொலி அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை 

உலகமயமாக்கலில் தனிக்குழுக்களின் தனித்தன்மைகள் காக்கப்பட

திருத்தந்தை : சிறுபான்மையினராக வாழும் மக்களின் வட்டார மொழிகளுக்கும் கலாச்சாரத்திற்கும் வாய்ப்பளித்து வெளிஉலகுக்குக் கொணர சமூகத்தொடர்புத் துறையினர் உதவ வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

இத்தாலிய அரசு சமூகத்தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் RAI தொலைக்காட்சி மற்றும் வானொலி அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மாவட்டத்தின் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அது குறித்து ஒளிபரப்பும் TGR என்ற பகுதி துவக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவையொட்டி RAI அதிகாரிகளை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில பகுதிகளில் சிறுபான்மையினராக வாழும் மக்களின் வட்டார மொழிகளும் கலாச்சாரமும் இதன் வழியாக வெளிஉலகுக்கு தெரிய வர வாய்ப்புக் கிட்டுகிறது என்றார்.

உலகமயமாக்கல் கொள்கைகளின் விளைவுகள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மயமாக்கல், அதாவது, அனைவரையும் இணைக்கும் இந்த நோக்கம் சிறந்ததே, ஆனால், அவைகள் நடைமுறைப்படுத்தப்படும் வழிகள் கேள்விக்குரியவைகளாக உள்ளன என்றார்.

அனைவரையும் ஒரே நிலைக்குக் கொணரும் முயற்சியில் குழுக்களின் தனித்தன்மைகளும் வளங்களும் தியாகம் செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், RAI சமூகத் தொடர்புத் துறையினர், இத்தாலியின் பல்வேறு பகுதி மக்களின் தனிப்பட்ட கலாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வழங்குவது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2019, 18:04