தேடுதல்

Vatican News
“ஆபத்தை அறியாத வானதூதர்கள்” என்ற தலைப்பில், ஆள்உயர பெரிய சிலை “ஆபத்தை அறியாத வானதூதர்கள்” என்ற தலைப்பில், ஆள்உயர பெரிய சிலை  (Vatican Media)

புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் நினைவாக ஆள்உயர சிலை

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை, பல்வேறு வரலாற்று காலங்களில், பல்வேறு கலாச்சார மற்றும் இன பின்புலங்களிலிருந்து வரும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் குழுவைச் சித்தரிக்கின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாளை முன்னிட்டு, செப்டம்பர் 29, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி மற்றும், மூவேளை செப உரையாற்றியபின், அவ்வளாகத்தில் “ஆபத்தை அறியாத வானதூதர்கள்” என்ற தலைப்பில், ஆள்உயர பெரிய சிலை ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தார்.

கானடா நாட்டு Timothy Schmaltz என்ற சிற்பி வடித்த வெண்கலம் மற்றும் களிமண்ணாலான இச்சிலை, பல்வேறு வரலாற்று காலங்களில், பல்வேறு கலாச்சார மற்றும் இன பின்புலங்களிலிருந்து வரும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் குழுவைச் சித்தரிக்கின்றது.

இதிலுள்ள ஆள்உயர பெரிய மனித உருவங்கள், ஒருவரோடு ஒருவர் தோளில் சாய்ந்து ஒன்றுசேர்ந்து ஒரு படகில் நிற்பதுபோல் வடிக்கப்பட்டுள்ளன. இந்த பலதரப்பட்ட மனிதர்களின் மத்தியிலிருந்து வானதூதர்களின் இரு இறக்கைகள் எழும்புவதுபோலும் உள்ளது. இது, அம்மக்கள் மத்தியில், ஏதோ ஒரு புனிதம் இருப்பதைக் காட்டுகிறது. அந்நியர் மத்தியில், குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் மத்தியில் ஒரு புனிதம் காணப்படுகின்றது என விளக்கப்படுகிறது.

“அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு” என, எபிரேயருக்கு எழுதப்பட்ட (எபி.13:2) திருமடல் பகுதியிலிருந்து இதற்கான உள்தூண்டுதல் கிடைக்கப்பட்டுள்ளது. 

சிற்பி

கானடா நாட்டு சிறிபி Timothy Schmaltz என்பவர், கடந்த 25 ஆண்டுகளாக, வெண்கலத்தில் பெரிய அளவில் சிலைகளை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் வடித்துள்ள சிலைகள், உரோம் மற்றும் வத்திக்கான் உள்ளிட்ட, உலகின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 

இவரது படைப்புகள் அனைத்தும் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டவை. தான் வடிக்கும் சிலைகள், மக்கள் உள்ளத்தைத் தொடுவது மட்டுமல்லாமல், அதன் ஓர் அங்கமாக அவர்கள் மாறுவார்கள் என்று, தான் நம்புவதாக சிற்பி Timothy Schmaltz அவர்கள் தெரிவித்துள்ளார்.

29 September 2019, 13:00