தேடுதல்

Vatican News
செய்தியாளர் சந்திப்பு செய்தியாளர் சந்திப்பு   (Vatican Media)

31வது திருத்தூதுப் பயண நிறைவில் செய்தியாளர் சந்திப்பு

Antananarivoவிலிருந்து விமானம் புறப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப்பின், அமைதி, போர், வயது முதிர்ந்தோர், அந்நியர் மீது வெறுப்பு, பல்சமய உரையாடல், உலகத் தாராளமயமாக்கல் போன்ற தலைப்புக்களில், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது

மேரி தெரேசா – வத்திக்கான்

மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளில், தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் செய்த ஏறத்தாழ எழுபது பன்னாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மடகாஸ்கர் தலைநகர் Antananarivoவிலிருந்து விமானம் புறப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப்பின், ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம், அமைதி, போர்கள், வயது முதிர்ந்தோர், அந்நியர் மீது வெறுப்பு, பல்சமய உரையாடல், உலகத் தாராளமயமாக்கல் உட்பட, பல்வேறு தலைப்புக்களில், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகளில், மகிழ்வு நிறைந்த முகங்களைக் கொண்ட சிறாரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, நாடுகள், குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அக்கறை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தான் எதிர்கொள்ளும் குறைகூறும் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த மனதுடன், நியாயமானதாய் மற்றும், கலந்துரையாடலுக்கு விருப்பம் தெரிவிப்பதாய் இருந்தால், அத்தகைய குறைசொல்லும் விமர்சனங்களை தான் வரவேற்பதாகவும், குறைகூறல்கள் எழுகையில், சிலவேளைகளில் கோபம் வந்தாலும், அவற்றை எப்போதும் நன்மைகளாகவே பார்க்கிறேன் எனவும், கூறினார்.

நியாயமான குறைகூறல்கள் எப்போதும் நன்றாக வரவேற்கப்படுகின்றன, அவற்றை நான் வரவேற்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, ஒருவர் விமர்சனங்களைப் பெறுகையில், அவற்றில் உண்மை இருக்கின்றதா என ஆராயவேண்டுமென்றும், அவை, நேர்மையாகவும், நேரிடையாகவும் கூறப்படும்போது, தான் அவற்றை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

முகத்திற்குமுன்னால் சிரித்துவிட்டு, முதுகுக்குப் பின்னிருந்துப் தாக்கும் விமர்சனங்களைத் தான் விரும்புவதில்லை, அது நேர்மையான செயல் அல்ல, மனிதப்பண்புமிக்கதும் அல்ல என்றுரைத்த திருத்தந்தை, தான் கூறும் விமர்சனங்களுக்குப் பதில்பெற விருப்பமில்லாதவர்கள், கல்லை எறிந்துவிட்டு, கைகளை மறைத்துக் கொள்பவர்கள் போலவும், நஞ்சு மாத்திரைகளைக் கொடுப்பவர்கள் போலவும் உள்ளனர் என்றார்.

நியாயமான முறையில் திருத்தந்தையை குறைகூறுபவர்கள், ஒருவிதத்தில் திருஅவை மீது அன்பு கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றனர் என்றும், இவர்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, பதிலைக் கேட்பதற்கும், கலந்துரையாடலிலும், விருப்பம் தெரிவிக்காமல் இருப்பவர்கள், திருஅவையின் நன்மையை விரும்புவதில்லை எனவும், இவர்கள் ஒரு கருத்தியலில் வேரூன்றி திருத்தந்தையை மாற்றுவதற்கும், பிரிவினையை உருவாக்கவும் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார். பிரிவினை இடம்பெறாது என்று தான் நம்புவதாகவும், அதேநேரம் குறைகூறும் விமர்சனங்கள் பற்றி பயப்படவில்லை எனவும், திருத்தந்தை தெரிவித்தார்.

11 September 2019, 16:20