தேடுதல்

Vatican News
புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு  பன்னாட்டு கருத்தரங்கின் பிரதிநிதிகள் புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு பன்னாட்டு கருத்தரங்கின் பிரதிநிதிகள்  (Vatican Media)

நாம் அறிவிக்கும் அன்பிற்கு உயிருள்ள அடையாளங்களாக விளங்குங்கள்

புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு கல்வி மையங்கள் மற்றும், பள்ளிகளுக்கென உரோமையில் செப்டம்பர் 19,20,21 ஆகிய நாள்களில், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இக்காலத்தில் நம்மோடு வாழ்கின்ற பலர், எம்மாவுஸ் சீடர்கள் போன்று, கடவுளின் நெருக்கத்தை உணர இயலாமல் இருக்கின்றவேளை, அவரின் பிரசன்னம் ஆற்றும் வியப்பு, இதயங்களில் பற்றியெரியச் செய்ய வேண்டியது நம் சவாலாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இச்சனிக்கிழமையன்று கூறினார்.

புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையால் நடத்தப்பட்ட, பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை, செப்டம்பர் 21, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நாம் அறிவிக்கும் அன்பின் உயிருள்ள அடையாளங்களாக மாற வேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.

“புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதன் வழியாக, கடவுளைச் சந்திப்பது இயலக்கூடியதா?” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் காலத்து மக்களின் இதயங்கள், கடவுளின் பிரசன்னத்தால் பற்றியெரிய வைக்க வேண்டியது நமக்குமுன் வைக்கப்பட்டுள்ள சவால் என்றும் கூறினார்.

கடவுளின் பிரசன்னத்தை மங்கச்செய்யும் அடையாளங்கள் மத்தியில், அவரைச் சந்திப்பதற்குரிய ஆவலை எவ்வாறு தூண்டிவிடுவது என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, சவாலான இப்பணியை பல்வேறு தடைகளோடு, நாம் ஆற்றவோண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இன்றைய உலகில் பலர், குறிப்பாக, மேற்கில் வாழ்பவர்கள், தங்களை திருஅவை புரிந்துகொள்ளவில்லை மற்றும், தங்களின் தேவைகளிலிருந்து தூரமாக உள்ளது என்று, திருஅவை பற்றி சொல்கின்றனர், ஆனால், திருஅவை தன்னை பற்றி அறிவிப்பதற்காக இருக்கவில்லை, மாறாக, நற்செய்தியின் மணம் உணரப்பட வேண்டும் என்பதற்காக திருஅவை உள்ளது என்றார் திருத்தந்தை.

ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருக்கும் அருங்காட்சியகம் போன்றதாக அமையும் சோதனையை, திருஅவை புறக்கணிக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, அன்புகூர்தலும், அன்புகூரப்படுதலும் அடிப்படையாகத் தேவைப்படுகின்றது என்றார். 

21 September 2019, 16:11