தேடுதல்

Vatican News
வெனெசுவேலா கத்தோலிக்கர் வெனெசுவேலா கத்தோலிக்கர்  (AFP or licensors)

வெனெசுவேலா இளையோர் கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

Maracaibo நகரில், செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று துவங்கியுள்ள தேசிய கத்தோலிக்க இளையோர் கூட்டம், செப்டம்பர் 15, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்

மேரி தெரேசா– வத்திக்கான் செய்திகள்

"எல்லாரோடும், எல்லாருக்கும் மறைப்பணி" என்ற தலைப்பில், வெனெசுவேலா நாட்டில் நடைபெறும், 11வது தேசிய கத்தோலிக்க இளையோர் கழகக் கூட்டத்திற்குச் (ENJAC 2019) செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியின் நம்பிக்கை மற்றும், மகிழ்வை, தாங்கள் வாழ்கின்ற சூழல்களில், குறிப்பாக,  சமுதாயத்தால் அதிகம் ஒதுக்கப்பட்டோர் மற்றும், உதவி தேவைப்படுவோருக்கு, துணிச்சலுடன் வழங்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நாம் இலவசமாக பெற்றுக்கொண்ட விசுவாசம் எனும் கொடையை, சுதந்திரமாக அறிவித்து, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

அந்நாட்டின், Maracaibo நகரில், செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று துவங்கியுள்ள இந்த இளையோர் கூட்டம், செப்டம்பர் 15, இஞ்ஞாயிறன்று நிறைவடையும். இக்கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி, இவ்வெள்ளி மாலையில் வாசிக்கப்பட்டது.

Asta Lamborghini

மேலும், Lamborghini வாகன நிறுவனத் தலைவர் மற்றும், Lamborghini Huracán வாகனத்தை ஏலத்திற்கு விட்ட நிகழ்வை மேற்பார்வையிட்டவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு வழங்கப்பட்ட நிதியுதவி, நேரிடையாக, பிறரன்புப் பணிகளுக்கென அனுப்பப்படும் என்று சொல்லி, அந்நிறுவனத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்,

2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட Huracán வாகனத்தை, செக் குடியரசைச் சேர்ந்த ஒருவர், ஏலத்திற்கு எடுத்துள்ளார்.  

இதன் அடையாளமாக, ஏறத்தாழ ஒன்பது இலட்சம் யூரோக்கள் கொண்ட காசோலை திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது. இதில், ஏறத்தாழ 2 இலட்சம் யூரோக்களை, ஹெய்ட்டியில் 2010ம் ஆண்டில் நிலநடுக்கத்தில் சேதமான சிறார் பள்ளி மற்றும், குருத்துவ கல்லூரி மறுசீரமைக்கப்பட வழங்கப்படவுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பாளர் Matteo Bruni அவர்கள் தெரிவித்தார்.

மேலும், 2 இலட்சம் யூரோக்கள், ஈராக்கின் நினிவே பகுதியைச் சீரமைப்பதற்கென, துன்புறும் திருஅவைகளுக்கு உதவும், Aid to the Church in Need அமைப்புக்கும், மேலும், 1,60,000 யூரோக்கள், மத்திய ஆப்ரிக்காவில் பிறரன்பு பணியாற்றும் இரு அமைப்புகளுக்கும்,   மேலும் 3 இலட்சம் யூரோக்கள், மனித வர்த்தகம் மற்றும், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் திருத்தந்தை 23ம் ஜான் அமைப்பு உட்பட சில அமைப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 September 2019, 15:34