தேடுதல்

இத்தாலிய அறுவைச் சிகிச்சை  மற்றும், பல் மருத்துவர்கள் கூட்டமைப்பு இத்தாலிய அறுவைச் சிகிச்சை மற்றும், பல் மருத்துவர்கள் கூட்டமைப்பு  

கருணைக்கொலை, தற்கொலைக்கு உதவுதலுக்கு எதிராய் திருத்தந்தை

இறப்பதற்கு விரும்பும் நோயாளிக்கு ஆதரவளிக்கும் சோதனையைப் புறக்கணிக்க முடியும் மற்றும், புறக்கணிக்க வேண்டும் – இத்தாலிய மருத்துவர்களிடம் திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 20, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, இத்தாலிய தேசிய அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் மற்றும், பல் மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஏறத்தாழ 350 உறுப்பினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மருத்துவத்தில், ஒவ்வொரு நோயாளியின் தனித்துவம் மதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இறப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் நோயாளிக்கு ஆதரவாக மருந்தைக் கொடுப்பது, தற்கொலைக்கு உதவுவது, கருணைக்கொலைக்கு நேரிடையாக உதவுவது போன்றவற்றுக்கு வருகின்ற சோதனையை, அவை, சட்டத்தில் கொணரப்பட்டுள்ள மாற்றங்களால் தூண்டப்பட்டாலும்கூட, அந்தச் சோதனையை, மருத்துவர்களால் புறக்கணிக்க முடியும், மற்றும், அவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

மருந்து, மனித வாழ்வுக்குத் தொண்டாற்றுவது என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால், அது, ஒவ்வொரு மனிதரின், ஆன்மீக மற்றும், உடல் பிரச்சனைக்கு உதவுவதாய் இருக்க வேண்டும் என்ற உண்மையின் அடிப்படையில் மருத்துவர்களின் பணி அமைய வேண்டும் என்பது பாரம்பரியமாக உணரப்பட்டு வருகிறது என்று, திருத்தந்தை கூறினார்.

நோய்க்குச் சிகிச்சை அளிப்பது, வெறும் மருத்துவம் சார்ந்தது மட்டுமல்ல, அது, நோயாளியின் முழு மனித நிலையை கண்ணோக்குவதாயும், அவரின் தனித்துவத்தை மதிப்பதாயும் இருக்க வேண்டும் எனவும் கூறியத் திருத்தந்தை, கருணைக்கொலைக்கு உட்படும் சோதனையிலிருந்து விலகி இருக்குமாறு, மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஒருவர் தன் வாழ்வை தன்னிச்சையாக முடித்துக்கொள்வதற்கு உரிமை கிடையாது, எனவே, எந்த ஒரு மருத்துவரும், நடைமுறையில் இல்லாத உரிமைக்குப் பாதுகாவலராக மாறக்கூடாது என்ற, நலவாழ்வுப் பணியாளரின் புதிய சாசன எண் 169ஐயும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2019, 15:42