தேடுதல்

Vatican News
மடகாஸ்கரில் மரம் நடும் திருத்தந்தை மடகாஸ்கரில் மரம் நடும் திருத்தந்தை 

அமைதி மற்றும் நம்பிக்கையை விதைப்பவராக வந்துள்ளேன்

உலகிலுள்ள தாவர வகைகளில் 5 விழுக்காடு, மடகாஸ்கரில் மட்டுமே உள்ளன. இந்நாட்டில் சட்டத்திற்குப் புறம்பே நடைபெறும், மரங்கள் வெட்டப்படுதல் மற்றும், இயற்கை வளங்கள் சுரண்டப்படலைத் தவிர்ப்பதற்கு மாற்று வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான்

செப்டம்பர் 7, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, ஆந்தனனரிவோ (Antananarivo) நகர் திருப்பீட தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், 9 மணியளவில், அங்கிருந்து 19.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள “Iavoloha” அரசுத்தலைவர் மாளிகைக்கு, காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள “Iavoloha” மாளிகை, 1975ம் ஆண்டில், வடகொரிய அரசு வழங்கிய நன்கொடையால் கட்டப்பட்டது. காலை 9.30 மணியளவில் அங்குச் சென்ற திருத்தந்தையை, அரசுத்தலைவர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.  இருவரும் தனியே சிறிதுநேரம் உரையாடினர். பரிசுப்பொருள்களையும் பகிர்ந்துகொண்டனர். அம்மாளிகையின் தங்கப் புத்தகத்தில், “அமைதி மற்றும் நம்பிக்கையை விதைப்பவராக இங்கு வந்துள்ளேன். இந்த மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள், மடகாஸ்கர் மக்களுக்கு அபரிவிதமான கனிகளைக் கொணர்வதாக! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று, பிரெஞ்ச் மொழியில் எழுதினார், திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர், அந்த மாளிகையில், மடகாஸ்கர் நாட்டு அரசு, தூதரக அதிகாரிகள், மற்றும், பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் அரசுத்தலைவர் Andry Rajoelina அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். இவர், இவ்வாண்டு சனவரியில் ஆட்சிக்கு வந்தவராவார். அரசுத்தலைவரின் உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மடகாஸ்கர் நாட்டுக்கு, தனது முதல் உரையை வழங்கினார். ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தில் அக்கறை காட்டுங்கள் என்று, மடகாஸ்கர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப் பின்னர் அம்மாளிகையின் முன்புறத்திலுள்ள தோட்டத்தில், Baobab எனப்படும், மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகைகளில் ஒரு மரக்கன்றை நடும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுதுதான் நடப்பட்டிருந்த அந்த மரக்கன்றுக்கு, திருத்தந்தை மண்வெட்டியால் மண்ணை அள்ளி, அதன் வேர்ப்பகுதியில் இட்டார். திருத்தந்தையைத் தொடர்ந்து, அரசுத்தலைவரும் அவ்வாறே செய்தார். உலகிலுள்ள தாவர வகைகளில் 5 விழுக்காடு, மடகாஸ்கரில் மட்டுமே உள்ளன. இந்நாட்டில் மரங்கள் வெட்டப்படுதல் மற்றும், இயற்கை வளங்கள் சுரண்டப்படல், ஆகியவை சட்டத்திற்குப் புறம்பே நடைபெறுகின்றன என்றும், இத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் அழிந்து வருகின்றது என்றும், மனிதாபிமானமற்ற ஏழ்மை நிலவும் இந்நாட்டில் மக்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அரசு அதிகாரிகளிடம், திருத்தந்தை வலியுறுத்தினார். மடகாஸ்கர், உலகின் 10 மிக வறிய நாடுகளில் ஒன்று என கணிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்தின்மையால், இரு குழந்தைகளுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

07 September 2019, 15:45