ஆழ்நிலை தியான சகோதரிகளுக்கு உரை ஆழ்நிலை தியான சகோதரிகளுக்கு உரை 

சிறு சிறு அன்புச் செயல்கள், இவ்வுலகைக் காப்பாற்றும்

Antananarivoவில் மடகாஸ்கர் நாட்டு ஆழ்நிலை தியான துறவு சபை அருள்சகோதரிகளைச் சந்தித்த நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

மடகாஸ்கர் நாட்டின் ஆழ்நிலை தியான அருள்சகோதரிகளுக்கு, சிறுமலரான புனித குழந்தை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வுடன் தன் பகிர்வைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வு, பல துறவு சபைகள் மற்றும் ஆழ்நிலை தியான சபைகளோடு தொடர்புடையது. புனித தெரேசா, வயதுமுதிர்ந்த ஒரு சகோதரிக்கு, உணவூட்டியது உட்பட பல்வேறு உதவிகளைச் செய்தவேளை, அந்த வயதானவர் தொடர்ந்து புகார் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆயினும், புனித தெரேசா, எல்லா நேரங்களிலும் புன்னகையுடனே காணப்பட்டார். இதை, திருத்தந்தை, திரும்பத் திரும்பச் சொன்னார். நம் குழும வாழ்வில் நடப்பதில், ஒரு சிறிய பகுதியை இந்த நிகழ்வு பிரதிபலிக்கின்றது. புனித தெரேசா, உறுதியான கீழ்ப்படிதலுடன், மிக உன்னத அன்புடன் இதைச் செய்ததால், அவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இதனாலே, புனித தெரேசாவால் இயேசுவிடம், இந்த வயதான சகோதரிக்கு ஆற்றும் ஓர் அன்புச்செயலைவிட, இந்த உலகில் அனைத்தும், என்னை ஒருபோதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று சொல்ல முடிந்தது. தங்களின் சகோதரிகளுக்கு உதவிசெய்வதற்கு உண்மையிலேயே அழைக்கப்படுவதாக உணர்கின்ற பல ஆழ்நிலை தியான சகோதரிகள், பொதுவாக இந்த மாதிரியான சோதனையை எதிர்கொள்கின்றனர்.

சிறு சிறு அன்புச் செயல்கள்

சிறு சிறு அன்புச் செயல்களையே கடவுள் விரும்புகின்றார். இச்செயல்கள் வழியாக, கடவுள் உலகை மீட்கிறார் என்று நம்புவதற்கும் துணிச்சலையும் பெறுகிறோம். உலகை மாற்றுவதற்கு அல்லது, துறவு வாழ்வை சிறப்பாக மாற்றுவதற்குரிய கனவுகள், இத்தகைய சிறு சிறு அன்புச் செயல்களிலிருந்தே துவங்குகின்றன. இச்செயல்கள், கடவுள் நம் மத்தியில் இருப்பதை இன்னும் அதிகமாக்குகின்றன.  

அன்பும் செபமும்

சோதனைகளுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுவது, ஆழ்நிலை தியான வாழ்வின் மற்றொரு கூறாகும். தன் உள்ளத்தில் எழும் இந்தச் சோதனையை இல்லத் தலைவரோடு அல்லது சக சகோதரியோடு பகிர்ந்துகொள்வது ஒன்றிணைந்த குழுவை அமைப்பதற்கு உதவும். இவ்வாறு கூறியத் திருத்தந்தை, தான் ஒரு வயதான அருள்பணியாளரோடு வாழ்ந்த சமயத்தில், புனித தெரேசாவின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு தனக்கு உதவியாக இருந்தது என்பதையும் பகிர்ந்துகொண்டார். புனிதராக மாறுவதற்கு, இப்புனிதரின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.   

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடகாஸ்கர் ஆழ்நிலை தியான சகோதரிகளிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2019, 15:34