தேடுதல்

இத்தாலிய இரயில் துறை அதிகாரிகளை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை இத்தாலிய இரயில் துறை அதிகாரிகளை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை 

தேவையிலிருப்போருக்கு உதவ வேண்டிய இரயில் துறை

கடந்து செல்லும் நிலப்பகுதிகளின் தனித்தன்மைகளைப் புரிந்து செயல்படுதல், அர்ப்பணம் போன்றவை இரயில் துறை அதிகாரிகளுக்கு முக்கியமானவை. - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

இரயில் பயணிகளின் பயணத்தை மிகவும் சுகம் நிறைந்ததாக மாற்றுவதன் வழியாக பயணிகளின் வாழ்க்கை தரம் மேம்பட உதவ முடியும் என இத்திங்கள் காலை இத்தாலிய இரயில் துறை அதிகாரிகளை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பணிக்குச் செல்பவர்கள், சுற்றுலாப் பயணிகள், குடும்பங்களைச் சந்திக்கச் செல்பவர்கள் என பல்வேறுதரப்பட்டவர்கள் பயணம் செய்யும் துறையில் பணியாற்றுபவர்கள், அவர்களின் சுகமான பயணத்திற்கு மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவுகின்றனர் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பணியிடங்களில் பாதுகாப்பு, ஒப்பந்த பணி நிர்வாகம், சுற்றுச்சூழல் அக்கறை, கடந்து செல்லும் நிலப்பகுதிகளின் தனித்தன்மைகளைப் புரிந்து செயல்படுதல் போன்றவைகள் இரயில் துறை அதிகாரிகளுக்கு முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு மிகப்பெரும் அர்ப்பணம் தேவைப்படுகின்றது எனவும் எடுத்துரைத்தார்.

மக்களை கவரக்கூடியதாகவும்,  நீடித்த நிலைத்த பலன் தருவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இத்தாலிய இரயில் துறை  செயல்பட முடியும் என மூன்று கூறுகளைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரயில் துறை கடந்து செல்லும் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மதிப்பளித்து செயல்படுவதில் அர்ப்பணத்துடன் ஈடுபட்டு வருவது குறித்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், முதியோர், நோயாளிகள், குறைந்த வருமானம் உடையோர் போன்றோருக்கும் பயன்தரும் திட்டங்களைத் தீட்டி செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டின் எந்த பகுதியும் தனிமைப்படுத்தப்படாமல், அவைகளை ஏனையப் பகுதிகளோடு இணைப்பதில் இரயில் துறையின் சேவையைப் பாராட்டுவதாகவும் இத்தாலிய இரயில் துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2019, 18:09