இத்தாலிய உடற்பயிற்சி கூட்டமைப்பினர் சந்திப்பு இத்தாலிய உடற்பயிற்சி கூட்டமைப்பினர் சந்திப்பு 

விளையாட்டு, வாழ்வின் விழுமியங்களை வளர்ப்பதற்கு உதவுகிறது

விளையாட்டை, எப்போதும் நேர்மை மற்றும், நலமான போட்டி மனப்பான்மையோடு வாழும்போது, வருங்காலத்தில், வாழ்வின் சவால்களை, துணிவு, நேர்மை, மகிழ்வு, அமைதி, மற்றும் நம்பிக்கையுடன் வாழ இயலும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

விளையாட்டு அமைப்புகள் சமுதாயங்களில் செயல்படுவது, விளையாட்டுகளை நடத்துவதற்கு மட்டுமல்லாமல், மனித மற்றும், சமுதாய நட்பின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மனநிலையை வளர்க்கவும் அழைக்கப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

இத்தாலிய உடற்பயிற்சி கூட்டமைப்பு துவங்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்த அமைப்பின் ஏறத்தாழ எழுபது உறுப்பினர்களை, செப்டம்பர் 28, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.  

விளையாடுவது, உடல்நலத்திற்கு நல்லது மட்டுமல்ல, வாழ்வை நேர்மறையுடனும், நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் நோக்குவதற்கும் உதவுகின்றது, இதனால், இது, நேர்மை மற்றும், நீதியை அன்புகூர்வது, அழகை இரசிப்பது, நன்மைத்தனம், சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டைத் தேடுதல் போன்ற, வாழ்வின் விழுமியங்களை வளர்த்துக்கொள்ளும் அனுபவத்தை, புதிய தலைமுறைகளுக்கு அளிக்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.  

இக்காலத்தில், விளையாட்டு அமைப்பு, சிலவேளைகளில், கடும் போட்டி உணர்வுகளால், ஆதாயத்திற்குக் கட்டுப்பட்டு இருப்பதுபோல் தெரிகின்றது, ஏன், வன்முறை போக்குகளையும் கொண்டுள்ளது, இத்தகைய எதிர்மறை கூறுகளுக்கு மத்தியில், விளையாட்டு வீரர்களும், அவர்களை வழிநடத்துவோரும், விளையாட்டுச் சூழல்களில் நற்செய்தியின் மனிதாபிமான சக்திக்குச் சாட்சிகளாகத் திகழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

விளையாட்டு வீரர்கள் மற்றும், அவர்களை வழிநடத்துவோரின் கிறிஸ்தவ விசுவாசம், நற்செய்தியின் விழுமியங்களுக்குச் சான்று பகர்வதன் வழியாக, உடன்பிறந்தநிலையை அதிகமாகக் கொண்ட சமுதாயத்தை சமைப்பதற்கு உதவ முடியும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

விளையாட்டை, எப்போதும் நேர்மை மற்றும், நலமான போட்டி மனப்பான்மையோடு வாழுமாறு வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியாக, வருங்காலத்தில், வாழ்வின் சவால்களை, துணிவு மற்றும், நேர்மையுடனும், மகிழ்வு,    மற்றும் அமைதியான நம்பிக்கையுடனும் வாழ இயலும் என்று கூறினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2019, 14:45