கார்மேல் சபை பிரதிநிதிகள் சந்திப்பு கார்மேல் சபை பிரதிநிதிகள் சந்திப்பு 

திருத்தந்தை - வறியோரில் இறைவனைத் தேடுங்கள்

கார்மேல் சபை துறவிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுள் பற்றி தியானியுங்கள் மற்றும், அவரை, மக்களில், குறிப்பாக வறியோரில் தே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கார்மேல் மலையின் புனித கன்னி மரியா அருள்சகோதரர்கள் சபை எனப்படும், கார்மேல் சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளுக்கு, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கடவுள் பற்றி தியானியுங்கள் மற்றும், அவரின் மக்களுக்கு, குறிப்பாக வறியோருக்குத் தொண்டாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்

செப்டம்பர் 21, இச்சனிக்கிழமை முற்பகலில், திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த கார்மேல் சபை பிரதிநிதிகளிடம், தந்தைக்குரிய பாசத்துடன் மற்றும், திறந்த மனதுடன் தன் எண்ணங்களை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குச் சேவையாற்றுங்கள் என அழைப்பு விடுத்தார்.

“ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நீங்களே என் சாட்சிகள்: கார்மேல் சபையின் தனிவரத்திற்கு விசுவாசமாக இருக்க அழைப்பு” என்ற தலைப்பில், உரோம் நகரில் இப்பொதுப் பேரவை நடைபெற்று வருகிறது.

இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக வாழ்தல், செபம், உடன்பிறந்த உணர்வு மற்றும், சேவை வழியாக, வாழும் கடவுளின் முகத்தைத் தேடுவதற்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவருக்குப் பிரமாணிக்கத்துடன் பணியாற்றுவது, கார்மேல் சபையின் தனிவரமாகும். இதை அடிப்படையாக வைத்து திருத்தந்தையும், மூன்று செயல்திட்டங்களை அச்சபையினருக்குத் தெரிவித்தார்.

பிரமாணிக்கம் மற்றும், தியானம்

கார்மேல் சபையின் கொள்கை நூலில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ள, பிரமாணிக்கம், தியானம் ஆகியவற்றை முதலில் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இத்துறவிகள், உலகப்பற்றிலிருந்து விடுபட்டு, கடவுளோடு ஆள்-ஆள் உறவு கொண்டிருப்பதில் வேரூன்றப்பட்டிருந்தால், இவர்களின் இறைப்பணி, பலனளிக்கும் என்றும் கூறினார்.

செபமும் செயலும்

கடவுளில் வேரூன்றாமல், அவர் பற்றிய ஆயிரம் காரியங்களில் கவலையாய் இருப்பது,  விரைவில் நம் பயணத்தில் அவரை இழக்க வேண்டியிருக்கும் என்றுரைத்த திருத்தந்தை, மக்களோடு பழகி, நண்பர்களாக்கி வாழுமாறும் ஊக்கப்படுத்தினார்.   

உலகப்போக்கு, வெதுவெதுப்பான நிலை, இல்லத்திற்குள்ளே இருப்பது போன்ற, இக்காலத்தில் திருஅவையைச் சேதப்படுத்துகின்ற ஆபத்தான சோதனகளுக்கு உட்படாமல், கிறிஸ்துவின் உடலின் காயங்கள் வெளிப்படையாகத் தெரிகின்ற நம் சகோதரர், சகோதரிகளுக்குப் பணியாற்றுமாறு, திருத்தந்தை, அத்துறவிகளிடம் கூறினார்.

உலகப்போக்கின்படி வாழத்தூண்டும் சோதனைக்கு உட்படாமலும், உலகில் நற்செய்தியின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ளுமாறும் கூறினார், திருத்தந்தை.

கனிவும், இரக்கமும்

துன்பங்களால் நொறுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ள நம் சகோதரர்களில், இயேசுவின் காயங்கள் காணக்கூடிய முறையில் உள்ளன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மக்களின் காயங்களைத் தொட்டு, பராமரிப்பதன் வழியாக, நம் மத்தியில் வாழ்கின்ற உயிருள்ள கடவுளை, நம்மால் வணங்க முடியும் என்று கூறினார்.

மனித சமுதாயத்தின் இருளான இரவுகள் மற்றும், கொடூரங்களை நாம் மேலும் மேலும் உணர்வதற்கு, இரக்கம் என்ற புரட்சி இக்காலத்திற்குத் தேவைப்படுகின்றது என்றும், கார்மேல் சபைத் துறவிகளுக்கு கனிவும், இரக்கமும் உள்ள இதயம் தேவை என்றும், திருத்தந்தை, கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2019, 16:18