உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை 

உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை

கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும், வேறுபட்டக் கருத்துக்களை வலியுறுத்துவதும், நம் குழுமங்களில் இடம்பெற்றாலும், அந்தப் பகிர்வுகள், பாராளுமன்றத்தைப்போல், அரசியல் இசைவுகளின் வழி செல்லும் இடமல்ல - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 2, இத்திங்கள் காலை, உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டு முறை ஆயர் மாமன்றத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களிடம், குழுமப்பண்பும், தூய ஆவியாரும் என்ற கருத்துக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஒரே குழுவாக, கிறிஸ்தவ சமுதாயம் ஒன்றிணைந்து செல்லும் பயணத்தின்போது, தூய ஆவியாரின் இருப்பு முக்கியமானது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவக் குழுமம் என்பது, ஓருவருக்கொருவர் கேள்விகளை எழுப்பி, விவாதம் செய்யும் பாராளுமன்றக் குழுக்களைப்போல் நோக்கப்படக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும், வேறுபட்டக் கருத்துக்களை வலியுறுத்துவதும், நம் குழுமங்களில் இடம்பெறுகின்றன என்றாலும், அந்தப் பகிர்வுகள், பாராளுமன்றத்தைப்போல், அரசியல் இசைவுகளின் வழி செல்லும் இடமல்ல என்று கூறினார் திருத்தந்தை.

திருஅவையின் அழைப்பும், தனித்தன்மையும், அதன் நற்செய்தி அறிவிப்பாகும் என்றும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே உணர்வுடன், தூய ஆவியாரோடு இணைந்து, ஆயர் மாமன்ற கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தூய ஆவியாரை நோக்கி செபியுங்கள், அவர் உங்களை வழிநடத்துவார், அன்னை மரியா உங்களுக்குத் துணைநிற்பார் என்ற ஆசி மொழிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டு முறை ஆயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2019, 15:49