லூர்து அன்னை திருத்தலத்தில் திருப்பயணிகள் லூர்து அன்னை திருத்தலத்தில் திருப்பயணிகள் 

துணிச்சலுடன் சிலுவையை ஏற்பவர்கள் அருகில் கடவுள்

பாலஸ்தீனாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறார் உட்பட, பல்வேறு நோயாளிகள், முதியோர் மற்றும், அவர்களுக்கு உதவுகின்ற தன்னார்வலர்களைக் கொண்ட இத்தாலிய தேசிய திருப்பயணிகள் குழு, லூர்து நகர் திருத்தலத்தில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு நாளும், தங்களின் துன்பங்களை, துணிச்சலுடனும், விடாமனஉறுதியுடனும் ஏற்பவர்களோடு கடவுள் தோழமையுணர்வு கொண்டு, நெருக்கமாக இருக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூர்து நகர் திருப்பயணிகள் குழு ஒன்றிடம் கூறினார்.

இத்தாலிய UNITALSI அமைப்பு, பிரான்ஸ் நாட்டு லூர்து நகர் திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, திருத்தந்தையின் பெயரில் தந்திச் செய்தி அனுப்பியுள்ள, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்,  திருத்தந்தையின் செபமும், வாழ்த்தும் கலந்த செய்திகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய திருப்பயணத்தில் கலந்துகொள்ளும், பாலஸ்தீன மாற்றுத்திறனாளிச் சிறார், ஏழைகள், மற்றும், நோயாளிச் சகோதரர் சகோதரிகள், துன்புற்று மகிமையடைந்த இயேசுவை ஏற்பதற்கு, செபமும், பிறரன்பும் நிறைந்த இத்திருப்பயணம் உதவும் என்று திருத்தந்தை நம்புவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், லூர்து அன்னை திருத்தலத்தில் திருப்பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து அருள்பணியாளர்கள், திருப்பயணிகள், குறிப்பாக நோயாளிகளுக்கு, திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறார் உட்பட, பல்வேறு நோயாளர்கள், முதியோர் மற்றும், அவர்களுக்கு உதவுகின்ற தன்னார்வலர்களைக் கொண்ட    இத்தாலிய தேசிய திருப்பயணிகளின் முதல் குழு, இச்செவ்வாயன்று நிறைவு செய்துள்ளது. அடுத்த குழு தற்போது திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த இத்தாலிய தேசிய திருப்பயணத்தை வழிநடத்திச் சென்ற ஆயர் Luigi Bressan அவர்கள், இச்செவ்வாயன்று லூர்து நகர் புனித பெர்னதெத் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியவேளை, நீங்கள் சுமையாக இல்லை, மாறாக. எம் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியை வழங்குகிறீர்கள் என்று, மாற்றுத்திறனாளிகள் மற்றும், வயது முதிர்ந்த நோயாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2019, 16:35