மடகாஸ்கரிலிருந்து விடைபெற்ற திருத்தந்தை 100919 மடகாஸ்கரிலிருந்து விடைபெற்ற திருத்தந்தை 100919 

மடகாஸ்கரில் ஊழலுக்கு எதிராய் திருத்தந்தை கண்டனம்

மலகாசி மக்கள் எப்போதும் ஏழ்மையிலே வாழ்ந்து வருகின்றனர், ஆயினும், 2009ம் ஆண்டில், முன்னாள் அரசுத்தலைவர் Marc Ravalomananaவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, இந்நிலை மேலும் மோசமடைந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயற்கை வளங்கள் நிறைந்த மடகாஸ்கர் நாட்டில், பெருமளவான மக்கள், கடும் வறுமையில் வாழ்வதற்கு, வளங்கள் பங்கிடப்படாததே முக்கிய காரணம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் ஊழலுக்கு எதிராய்க் கண்டித்து பேசியது, வரவேற்கத்தக்கது என்றும், மறைப்பணியாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடகாஸ்கர் நாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றி பீதேஸ் செய்தியிடம் பேசிய, அந்நாட்டில் மறைப்பணியாற்றும் சலேசிய சபை அருள்பணியாளர் Cosimo Alvati அவர்கள், உலகில், ஐந்து மிக வறிய நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர், உலகினரால் மறக்கப்பட்ட நாடாகவும் உள்ளது என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடகாஸ்கரில் நிலவும் ஊழலுக்கு எதிராய்க் கடுமையாய்க் கண்டித்து பேசியது பற்றிக் குறிப்பிட்ட அருள்பணி Alvati அவர்கள், அந்நாட்டில் போர் இடம்பெறவில்லையெனினும், மக்கள், மிகக் குறைந்த ஊதியத்திலேயே, ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

மலகாசி மக்கள் எப்போதும் ஏழ்மையிலே வாழ்ந்து வருகின்றனர், ஆயினும், 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில், முன்னாள் அரசுத்தலைவர் Marc Ravalomananaவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, இந்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்றும், அருள்பணி Alvati அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 8, இஞ்ஞாயிறன்று Antananarivo நகரின் Soamandrakizay மறைமாவட்ட மைதானத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், அந்நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராய்க் குரல் எழுப்பினார். இத்திருப்பலியில் ஏறத்தாழ பத்து இலட்சம் மக்கள் பங்கு பெற்றனர்.(Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2019, 14:35