San Sebastianல் சூரிய உதயம் San Sebastianல் சூரிய உதயம் 

படைப்பின் பாதுகாப்பு - திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

"நாம் இறைவனையும், மற்றவரையும் சந்திப்பதற்குரிய இடமாக படைப்பை நோக்குவோம்; இறைவனைப் புகழ்ந்து பாட, இயற்கை நம்மைத் தூண்டுகிறது"

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் கடவுளின் அன்புக்குரிய படைப்புக்கள். நம் வாழ்வை, அன்புகூரவும், ஏனையப் படைப்புக்களுடன் ஒன்றிப்பில் வாழவும், இறைவன் தன் நன்மைத்தனத்தில் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 2, இத்திங்களன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "நாம் இறைவனோடும், ஒருவர் மற்றவரோடும் சந்திப்பதற்குரிய இடமாக படைப்பை நோக்குவோம்; இறைவனைப் புகழ்ந்து பாட, இயற்கை நம்மைத் தூண்டுகிறது" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

அதேவண்ணம், அவர் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், "மற்றவர் துவக்கவேண்டும் என்று காத்திராமல், காலம் தாழ்த்தாமல், நன்மைகள் ஆற்றும் சக்தியை, வாழ்வை அன்புகூரும் இறைவன் நமக்கு வழங்குவாராக" என்ற சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்திருந்தார்.

மேலும், செப்டம்பர் 1, இஞ்ஞாயிறன்று, படைப்பைப் பாதுகாக்கும் அர்ப்பணத்துடன் கூடிய படைப்பின் காலம் துவக்கப்பட்டுள்ளதையொட்டி, படைப்பைப் பாதுகாக்கவும், படைப்பிற்காகச் செபிக்கவும், படைப்பிற்கு நெருக்கமாக வாழவும் நம் வாழ்வு முறைகளைக் குறித்து ஆய்வு செய்யவும், அழைப்பு விடுத்து, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார் திருத்தந்தை.

அத்துடன், இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்டிருந்த நற்செய்தியை மையப்படுத்தி, தன் நான்காவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னலமற்ற தாராள மனப்பான்மை, மற்றும், கடவுளின் அன்பில் பங்குபெறுதல் என்ற கருத்துக்களை, இச்செய்தியில் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2019, 16:06