திருவிவிலியம் திருவிவிலியம் 

பொதுக்காலம் 3ம் ஞாயிறு - இறைவார்த்தை ஞாயிறு

விவிலியத்தின் பெரும்பகுதியை இலத்தீனில் மொழி பெயர்த்த புனித எரோணிமுஸ் இறைபதம் அடைந்ததன் 1600ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டில் நினைவுகூரப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு, கடவுளின் வார்த்தையைக் கொண்டாடவும், ஆழ்ந்து படிக்கவும், பரப்பவும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என, தன் சொந்த விருப்பத்தின்பேரில் வெளியிடும், Motu proprio அறிக்கையின் வழியாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 30, இத்திங்களன்று, இறைவார்த்தையை மையப்படுத்தி, "Aperuit illis" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அப்போஸ்தலிக்க மடலின் வழியாக, இறைவார்த்தை ஞாயிறை உருவாக்கியுள்ளார்.

திருவிவிலியத்தின் பெரும்பகுதியை இலத்தீனில் மொழி பெயர்த்த புனித ஜெரோம் அல்லது தமிழில் எரோணிமுஸ் என அழைக்கப்படும் இவரின் விழா நாளாகிய செப்டம்பர் 30ம் தேதி, இந்த ஏட்டை வெளியிடுவது காலத்திற்கேற்ற முக்கியத்துவம் பெற்றுள்ளது. "மறைநூலை அறியாதவர், கிறிஸ்துவை அறியாதவர்" என்று சொன்ன புனித ஜெரோம் இறைபதம் அடைந்ததன் 1600ம் ஆண்டு நிறைவும், இந்த 2019ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார். 

“Aperuit illis” என்ற இந்த ஏட்டின் தலைப்பும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இவை, புனித லூக்கா நற்செய்தி, 24ம் பிரிவிலுள்ள, “அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார் (லூக்.24,45)” என்ற வார்த்தைகளாகும். இப்பகுதியில், உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்கு எவ்வாறு தோன்றினார், மறைநூலைப் புரிந்துகொள்வதற்கு அவர்களின் இதயங்களை அவர் எவ்வாறு திறந்தார் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் விளக்கியுள்ளார். 

விவிலியத்திற்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள நாள், வருடாந்திர நிகழ்வாக நோக்கப்படக் கூடாது, மாறாக, ஆண்டு முழுவதும் ஆற்றப்பட வேண்டியதாக அமைய வேண்டும், ஏனெனில், திருவிவிலியம், மற்றும், ஆண்டவரின் உயிர்ப்பு பற்றிய அறிவிலும், அன்பிலும் நாம் வளர வேண்டிய அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.  

திருஅவையின் வாழ்வில், புனித மறைநூலை மீண்டும் கண்டுணர வேண்டியதன் முக்கியத்துவம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்பட வேண்டுமென்று உலகெங்கிலுமிருந்து விசுவாசிகள் கேட்டுக்கொண்டதன்பேரில், இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிறைவின்போதே இந்த அப்போஸ்தலிக்க மடல் பற்றிய சிந்தனை எழுந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு

விவிலியத்திற்குச் செவிமடுப்பவர்களுக்கு, அது உண்மையான மற்றும், உறுதியான ஒன்றிப்பிற்குரிய பாதையைச் சுட்டிக் காட்டுவதால், இறைவார்த்தை ஞாயிறு கொண்டாட்டம், கிறிஸ்தவ ஒன்றிப்பு மதிப்பு மிக்கது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தை ஞாயிறை, பெருவிழாவுக்குரிய தன்மையோடு சிறப்பிக்குமாறு, பங்குத்தளங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இறைமக்களின் கவனத்தை ஈர்க்கும் முறையில், திருவிவிலியம் உயர்த்தி வைக்கப்படுமாறும் பரிந்துரைத்துள்ளார்.

மறையுரை

திருவிவிலியத்தை விளக்குவதிலும், எல்லாரும் அதைப் புரிந்துகொள்ள உதவுவதிலும், மேய்ப்புப்பணியாளர்களுக்கு முதலும் முக்கியமுமான கடமை உள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரையிலும், திருவிவிலியம் கொண்டிருக்கும் மதிப்பு வலியுறுத்தப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவிவிலியம், சலுகைபெற்ற சிலருக்கு மட்டும் உரியது அல்ல, மாறாக, அதன் திருச்சொற்களைக் கேட்பவர்கள் மற்றும், அவற்றில் தங்களைப் புரிந்துகொள்பவர்கள் அனைவருக்கும் உரியது என்றும், அது ஆண்டவரின் மக்களின் நூல் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தூய ஆவியாரின் பங்கு

திருவிவிலியத்தில், தூய ஆவியாரின் பங்கு தலைசிறந்தது எனவும், அவரே தம் இறைமக்களின் விசுவாசத்தில் அதனை அனுபவிக்கச் செய்கிறார் எனவும் உரைத்துள்ள திருத்தந்தை, அப்புனித நூலுக்குச் செவிசாய்த்து, இரக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெரிய சவாலையும் நம்முன் வைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, இறைவார்த்தையை வரவேற்கும் நம் பயணத்தில் அதற்குச் செவிமடுக்கும் மகிழ்வையும், அதை தனத்தாக்கிக் கொள்ளவும் அன்னை மரியா உதவுகிறார் என, தனது அப்போஸ்தலிக்க மடலை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2019, 15:41