தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ  

முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோவுக்கு திருத்தந்தை கடிதம்

எனது அன்பளிப்பு, நம் இரு கிறிஸ்தவ திருஅவைகளும் முழு ஒன்றிப்பை நோக்கி முன்னேறுவதற்கு நாம் எடுத்துள்ள உறுதிப்பாட்டை எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது

மேரி தெரேசா– வத்திக்கான்

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோவுக்கு, புனித பேதுருவின் புனிதப்பொருள்களின் ஒரு பகுதியை, தான் அன்பளிப்பாக வழங்குவதன் நோக்கத்தை விவரிக்கும் மடல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

அன்பளிப்பின் பின்னணி

திருத்தூதர் புனித பேதுரு, உரோம் Circus of Nero (இவ்விடம் தற்போது வத்திக்கான் நகரப் பகுதியில் உள்ளது. இவ்விடத்தில் கி.பி.65ம் ஆண்டில், அரசு, கிறிஸ்தவர்களைக் கொலைசெய்து வந்தது) இடத்தில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டபின், அவரது உடல், அதற்கருகிலிருந்த  வத்திக்கான் குன்று கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது என்பதை, உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில், பாரம்பரியமாக தொடர்ச்சியாக, தடைபடாமல் நம்பப்பட்டு வருகிறது என்று திருத்தந்தை அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் உடனடியாக, புனித பேதுருவின் கல்லறை, கிறிஸ்தவ உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திருப்பயண இடமாக மாறியது, பின்னர், பேரரசர் கான்ஸ்ட்டைன், அந்தக் கல்லறை அமைந்துள்ள இடத்தில் பசிலிக்காவை எழுப்பி, புனித பேதுருவுக்கு அர்ப்பணித்தார் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

எலும்புகள் கண்டுபிடிப்பு  

1939ம் ஆண்டு ஜூன் மாதத்தில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனே, வத்திக்கான் பசிலிக்காவிற்குக்கீழ் அகழ்வராய்ச்சிகளை மேற்கொள்ளத் தீர்மானித்தார். இந்தப் பணிகளின் பயனாக, புனித பேதுரு அடக்கம் செய்யப்பட்ட சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1952ம் ஆண்டில், பேதுரு பசிலிக்காவிலுள்ள திருப்பபலி பீடத்திற்குக் கீழ், 150ம் ஆண்டுக்குரிய சிவப்புநிற சுவரோடு ஒட்டிய அடக்க மாடக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில், கிரேக்கத்தில், “இங்கே பேதுரு இருக்கிறார் (Πετρος ενι)” என்று எழுதப்பட்டிருப்பதும், எலும்புகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை புனித பேதுருவின் எலும்புகள் என்பது, அறிவுப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டன. இந்த புனிதப் பொருள்கள் தற்போது, புனித பேதுரு பசிலிக்காவில் உள்ளன.

ஒன்பது புனிதப்பொருள்கள்

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இவற்றிலிருந்து ஒன்பது எலும்புத்துண்டுகளை எடுத்து, வத்திக்கான் மாளிகையில், பாப்பிறை அறைப்பகுதியிலுள்ள சிற்றாலயத்தில் வெண்கலப் பெட்டியில் வைத்தார். அவற்றின்மேல், “வத்திக்கான் பசிலிக்காவிற்குக் கீழ் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புகள், திருத்தூதர் புனித பேதுருவினுடையவை” என இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளன என திருத்தந்தை அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெண்கலப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள திருத்தூதரின் ஒன்பது எலும்புத்துண்டுகளை, முதுபெரும்தந்தையாகிய தங்களுக்கும், தங்களின் அன்புக்குரிய கான்ஸ்தாந்திநோபிள் திருஅவைக்கும் வழங்க விருப்பம் கொண்டுள்ளேன் எனவும் திருத்தந்தையின் மடலில் கூறப்பட்டுள்ளது. 

முதுபெரும்தந்தை அத்தனாகோரஸின் நன்கொடை

இந்த எனது அன்பளிப்பு, நம் இரு கிறிஸ்தவ திருஅவைகளும் முழு ஒன்றிப்பை நோக்கி முன்னேறுவதற்கு நாம் எடுத்துள்ள உறுதிப்பாட்டை எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குமுன், முதுபெரும்தந்தை அத்தனாகோரஸ் அவர்கள், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை, எருசலேமில் சந்தித்ததிலிருந்து நம் சபைகளுக்கிடையேயுள்ள உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் எனவும் கூறியுள்ளார்.  

உடன்பிறப்புக்களான திருத்தூதர்கள் பேதுருவும், அந்திரேயாவும் இணைந்து நிற்கும் அழகிய திருவுருவப் படத்தை, முதுபெரும்தந்தை அத்தனாகோரஸ் அவர்கள், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களுக்கு அளித்தார், அது, நம் ஆண்டவர் மீதுள்ள பொதுவான விசுவாசத்திலும், அன்பிலும் நம்மை ஒன்றிணைக்கின்றது என, திருத்தந்தை அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.  

நாம் எதிர்நோக்கும், உறுதியுடன் செபிக்கும், மற்றும், உழைக்கும் நம் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பு நிலவ, இந்தப் படம், இறைவாக்கு அடையாளமாக மாறியுள்ளது எனச் சொல்லி, திருத்தந்தை தனது மடலை நிறைவுசெய்துள்ளார்.

13 September 2019, 15:58