புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருக்கும் பக்தர்கள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருக்கும் பக்தர்கள் 

திருஅவைக்கு மேலும் 13 புதிய கர்தினால்கள்

திருஅவைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, 80 வயதைத் தாண்டியுள்ள மூவரை, அவர்களின் சிறப்புப் பணிகளுக்காக கர்தினாலாக உயர்த்தியுள்ளார், திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாங்கள் திருஅவையில் ஆற்றிய சிறப்புப் பணிகளுக்கு என 80 வயதிற்கு மேற்பட்ட  மூன்று ஆயர்கள் உட்பட, 13 பேரை, இஞ்ஞாயிறன்று, புதிய கர்தினால்களாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மதங்களிடையே உரையாடலை ஊக்குவித்துவரும் திருப்பீட அவையின் தலைவர், இஸ்பெயின் நாட்டு ஆயர் Miguel Angel Ayuso Guixot, திருப்பீட ஆவணக்காப்பகம், மற்றும், திருப்பீட நூலகத் தலைவர், பேராயர் José Tolentino Medonça, இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo Hardjoatmodjo, கியூபா பேராயர்  Juan de la Caridad García Rodríguez, காங்கோ ஜனநாயக குடியரசின் பேராயர் Fridolin Ambongo Besungu,  லக்ஸம்பர்க் பேராயர் Jean-Claude Höllerich, குவாத்தமாலா நாட்டு ஆயர் Alvaro L Ramazzini Imeri, இத்தாலியின் போலோஞ்ஞா பேராயர் Matteo Zuppi, மொராக்கோ நாட்டு Rabat பேராயர், Cristóbal López Romero, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றத்தாரர் துறையின் நேரடிச் செயலர், இயேசுசபை அருள்பணி Michael Czerny என திருஅவைப் பணியில் செயலாற்றிக் கொண்டிருக்கும் 10 பேரின் பெயர்களை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் முதலில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருஅவைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, 80 வயதைத் தாண்டியுள்ள மூவரை, அவர்களின் சிறப்புப் பணிகளுக்காக கர்தினாலாக உயர்த்தியுள்ளார், திருத்தந்தை. திருப்பீட தலைமையகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியபின், எகிப்திற்கான திருப்பீடத் தூதுவராகவும் பணியாற்றி ஓய்வுப்பெற்றுள்ள பேராயர் Michael Louis Fitzgerald, லித்வேனியாவின் முன்னாள் பேராயர், Sigitas Tamkevicius, அங்கோலாவின் Benguela முன்னாள் ஆயர் Eugenio Dal Corso ஆகியோரை கர்தினால்களாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த புதிய 13 கர்தினால்களும் தேர்வுச்செய்யப்பட்டுள்ளது, திருஅவையின் மறைப்பணி அழைப்பின் சிறப்பிடங்களைக் குறிப்பதாக உள்ளது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த புதிய கர்தினால்கள், அக்டோபர் மாதம் 5ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் இடம்பெறும் திருவழிபாட்டில் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2019, 13:15