புதன் மறைக்கல்வியுரையின்போது - 110919 புதன் மறைக்கல்வியுரையின்போது - 110919 

மறைக்கல்வியுரை-அண்மை திருத்தூதுப் பயண விதைகள் நல்ல பலன் தரட்டும்

உடன்பிறப்பு நிலை, சுதந்திரம், மற்றும், நீதியின் உண்மையான அடிப்படையாக, இயேசுவின் நற்செய்தி உள்ளது என்பதை இந்த உலகில் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்ட திருப்பயணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இம்மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதிவரை, மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீசியஸ் நாடுகளில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 11, இப்புதன் மறைக்கல்வியுரையின்போது, அந்நாடுகளில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயேசு எடுத்துரைத்த, கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள் குறித்த நற்செய்தி பகுதி முதலில் வாசிக்கப்பட்டது.

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை* எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும்விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.” (மத்.13, 31-33).

பின் தன் மறைக்கல்வியுரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீசியஸ் நாடுகளுக்கான என் திருப்பயணத்தை நிறைவுசெய்து, நேற்று இரவு வத்திக்கான் திரும்பினேன். நம் இந்த உலகில், உடன்பிறப்பு நிலை, சுதந்திரம், மற்றும், நீதியின் உண்மையான அடிப்படையாக இயேசுவின் நற்செய்தி உள்ளது என்பதை எடுத்துரைக்க, இந்நாடுகளுக்கு அமைதி, மற்றும், நம்பிக்கையின் திருப்பயணியாக, நான் சென்று வந்தேன். மொசாம்பிக் நாட்டில், பொதுநலனுக்காக ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை, அரசு அதிகாரிகளுக்கு வழங்கினேன், நாட்டை நன்முறையில் கட்டியெழுப்புவதில் தங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என, இளையோரை ஊக்கப்படுத்தினேன், மற்றும், கடவுளுக்கு தாராளமனதுடன் 'ஆம்' என்ற பதிலை வழங்குமாறு அந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், துறவறத்தாரை ஊக்கப்படுத்தினேன். மடகாஸ்கர் நாட்டு மக்கள் தங்களுக்கேயுரிய பாரம்பரிய ஒருமைப்பாட்டுணர்வுடன், சமூக நீதி மற்றும், சுற்றுச்சூழலுக்குரிய மதிப்புடன், நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை மடகாஸ்கர் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஆழ்நிலை தியான துறவுமடங்களில் வாழும் அருள்சகோதரிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், இளையோர் ஆகியோர், இறையழைப்பிற்கு தாராளமனதுடன் பதில்மொழி வழங்கவேண்டும் என, இங்கு நான் ஊக்கமளித்தேன். இறுதியாக, பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய மொரீசியஸ் நாட்டில், பல்வேறு சமூகங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிக்க அந்நாட்டில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு என் பாராட்டுக்களை வெளியிட்டேன். இத்திருப்பயணத்தின் இறுதித் திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகம், இயேசு எடுத்துரைத்த, கிறிஸ்துவின் சீடர்களின் அடையாள அட்டையாகிய, ' பேறுபெற்றவர்கள்' என்பது, எவ்வாறு, அமைதி, மற்றும், எதிர்நோக்கின் ஆதாரமாக உள்ளது என்பதை, நமக்கு நினைவூட்டியது. இந்த திருத்தூதுப் பயணத்தின்போது விதைக்கப்பட்ட விதைகளிலிருந்து நல்ல பலன்களை மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும், மொரீசியஸ் நாடுகளுக்கு இறைவன் கொணர வேண்டும் என செபிப்போம்.

 இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, மலேசியா, மால்ட்டா, நார்வே, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மக்களுக்கு, தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2019, 11:57