தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் - 250919 புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 250919 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: புனித ஸ்தேவானின் எடுத்துக்காட்டு

நற்செய்தி அறிவிப்பை, தங்கள் முதல் பணியாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்த சீடர்கள், ஏழைகளுக்குச் சேவையாற்றுவதன் அவசியத்தையும் அறிந்திருந்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் இடம் பெற்றது. அண்மைய சில வாரங்களாக, திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் துவக்ககால நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து, தன் மறைக்கல்வி போதனைகளில் விளக்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அதன் தொடர்ச்சியாக, புனித ஸ்தேவானின் மரணம் தரும் மாதிரிகை குறித்து எடுத்துரைத்தார். முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் 6ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை..........தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர் (தி.ப. 6, 8-10.15).

அதன்பின் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் மறைக்கல்வி உரைத் தொடரில், துவக்க காலத்தில் நற்செய்தி எவ்வாறு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது என்பதை, துவக்ககால கிறிஸ்தவ சமூகங்களிடையே கண்டு வருகிறோம். அப்பம் விநியோகிக்கப்பட்டதில், விதவைகள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற முறையீடு இருந்தது. நற்செய்தி அறிவிப்பை தங்கள் முதல் பணியாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்த சீடர்கள், நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும், ஏழைகளுக்குச் சேவையாற்றுவதற்கும் இடையேயான ஓர் இணக்கத்தைக் கண்டுகொண்டனர். ஏழு பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மீது கைகளை வைத்து, பிறரன்புப் பணிகளை ஆற்றும் பொறுப்பை அவர்களின் கைகளில் ஒப்படைத்தனர். இந்த ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவரான ஸ்தேவான் என்பவர், உடன்படிக்கையின் முழு வரலாற்றிற்கான முக்கிய திறவுகோலே இயேசுவின் பாஸ்கா மறையுண்மை என போதித்தார். ஆனால் அது, பலமான எதிர்ப்பைச் சந்தித்தது. இருப்பினும், தான் மரணத்திற்கு தீர்ப்பிடப்பட்டு கொல்லப்பட்ட வேளையில், தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்ததுடன், தன்னைக் கொல்லத் துணிந்தவர்களையும் மன்னித்தார். நாமும், நம்மை முழுமையாக இறைவனின் கைகளில் ஒப்படைப்பதையும், நமக்குத் தீமைச் செய்தவர்களை மன்னிப்பதையும், இந்த முதல் மறைசாட்சியின் எடுத்துக்காட்டு நமக்குக் கற்பிக்கிறது. நாமும் அக்கால, மற்றும், இக்கால மறைசாட்சிகளின் வாழ்வை குறித்து தியானிப்பதன் வழியாக, நற்செய்திக்கு விசுவாசமாக இருப்பதாலும், இயேசுவோடு ஒன்றிணைந்து நடப்பதாலும், நாம் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் மறைசாட்சியத் துன்பங்களை எதிர்கொண்டு, முழுமையான ஒரு வாழ்வைக் கொண்டிருக்கும் வரத்திற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   வரும் வெள்ளியன்று அனைத்து பிறரன்பு இயக்கங்களின் பாதுகாவலரான புனித வின்சென்ட் தெ பவுலின் திருவிழாவைச் சிறப்பிக்க உள்ளோம் என்பதை நினைவூட்டி, உதவி அதிகம் அதிகமாகத் தேவைப்படுவோருக்கு பணியாற்ற நம்மில் உள்ளுணர்வுகளைத் தூண்ட இப்புனிதர் உதவட்டும் என வேண்டினார். அவ்வளாகத்தில் குழுமியிருந்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2019, 11:29