“Nuovi Orizzonti ” மறுவாழ்வு மையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் “Nuovi Orizzonti ” மறுவாழ்வு மையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

வாழ்வின் மீள்கட்டமைப்பிற்கு கடவுள் எப்போதும் உதவுகிறார்

உரோம் நகருக்கு தென்கிழக்கேயுள்ள Nuovi Orizzonti மறுவாழ்வு மையத்தில், இச்செவ்வாயன்று திருப்பலி நிறைவேற்றி, அம்மையத்தின் பணிகளை ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகருக்கு தென்கிழக்கே ஏறத்தாழ 75 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள “புதிய விடியல்கள்” எனப்படும், “Nuovi Orizzonti ” மறுவாழ்வு மையத்திற்கு, இச்செவ்வாய காலை 9.40 மணியளவில், முன்னறிவிப்பு ஏதுமின்றி சென்று, ஏறத்தாழ அன்றைய நாள் முழுவதும் செலவிட்டு, திருப்பலி நிறைவேற்றி, அங்குள்ளவர்களை ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெருச்சிறார், வீடற்ற இளையோர், பாலியல் தொழிலுக்கு உள்ளான பெண்கள் போன்றோர்க்கும், பல்வேறு வகைகளில் உரிமைகள் மீறப்பட்டு துன்புறுவோர்க்கும் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதுடன், தெருக்களில் நற்செய்திப்பணியையும் கடந்த 25 ஆண்டுகளாக ஆற்றி வருகின்றது, Nuovi Orizzonti எனப்படும் அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளையின் தலைமை இல்லம் அமைந்துள்ள ஃபுரோசினோனே என்ற நகருக்கு, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்களுடன் சென்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, வாழ்வில் பெருந்துன்பங்களையும், தோல்விகளையும் நீங்கள் அனுபவித்திருந்தாலும், வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதில் துணிச்சலுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.

முழுமையாக அழிக்கப்பட்டுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என, இஸ்ராயேல் மக்களிடம் எஸ்ரா கூறும், இத்திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, மீண்டும் கட்டியெழுப்புதல் என்பது எளிதான செயல் அல்ல எனவும் கூறினார்.

இஸ்ராயேல் மக்களோடு ஆண்டவர் இருந்ததால், அவர்களால் அப்பணியை ஆற்ற முடிந்தது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது மட்டுமே, நம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும், ஏனெனில், கட்டுவதைவிட, மீண்டும் கட்டுவது மிகவும் கடினம் என்றும் கூறினார்.

சிதைந்த கட்டடங்களில் வாழப் பழகியுள்ளோம்

உங்களில் பலர், தங்கள் வாழ்வு, இடிந்துபோன கட்டட சிதைவுகளுக்குள் விழுவதைப் பார்த்திருக்கின்றீர்கள் மற்றும், அந்த சிதைவுகளில், சிறு சிறு துண்டுகளை எடுப்பதற்கு நீங்கள் போராடியிருக்கலாம், அழிவுச்சூழல்களிலிருந்து வெளிவர, மனநிலையில் மாற்றம் தேவைப்படுகின்றது, ஏனெனில், மக்கள் சிதைவுகளில் வாழப் பழகியுள்ளனர் எனவும் திருத்தந்தை மறையுரையில் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும், மீள்கட்டமைப்பு என்பது எப்போதும் எளிதாக இருக்காது என விளக்கிய திருத்தந்தை, வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது, ஓர் அருளாகும், அது வேலை மற்றும், போராட்டங்களால் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Nuovi Orizzonti அறக்கட்டளை, தற்போது 200 பயிற்சி மையங்களை நடத்துகின்றது. இது, விண்ணக நகரம் என்ற திட்டத்தின் அடிப்படையில், சிறிய கிராமம் ஒன்றையும், இவ்விடத்திற்கு அருகில் அமைத்துள்ளது. இக்கிராமத்தில், திருமணமாகாமல் தாயாகியுள்ளவர்கள் வாழ்கின்றனர். வீடற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிக்கப்படுகின்றனர். சிறைகளிலும், ஆபத்தான சூழல்களில் வாழ்கின்ற இளையோர்க்கும், நற்செய்தி அறிவிப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அந்த்ரேயா பொச்செல்லி

திருத்தந்தையின் இச்சந்திப்பில், இத்தாலியின் புகழ்பெற்ற, பார்வையிழந்த பாடகரும், கவிஞருமான அந்த்ரேயா பொச்செல்லி அவர்களும் கலந்துகொண்டார். இவர், இந்த அறக்கட்டளைக்கு உதவி வருகின்றவர். பள

Nuovi Orizzonti அறக்கட்டளை, கியாரா அமிராந்தே என்பவரால் 1993ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2019, 16:30