புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாள்  திருப்பலி புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாள் திருப்பலி 

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, பிறரன்பு தேவை

நலிந்த மக்கள் மீது அக்கறை காட்டவும், அவர்கள் வழங்கும் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு பெறவும், 1914ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் திருஅவையில், உலக புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அயல் நாட்டினர், கைம்பெண்கள் மற்றும், அனாதைப் பிள்ளைகள் மீது, ஆண்டவர் சிறப்பான அக்கறை கொண்டிருக்கின்றார், ஏனெனில் அவர்கள் உரிமைகளை இழந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியில் கூறினார்.

செப்டம்பர் 29, இஞ்ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, அன்று காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருப்பலி நிறைவேற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் திருப்பலி வாசகங்கள் மற்றும் பதிலுரைப் பாடலை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

மறக்கப்பட்டவர்கள் மற்றும், ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி, திருப்பாடல் ஆசிரியர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, விடுதலைப் பயண நூல் மற்றும், இணைச்சட்ட நூலில், கைம்பெண்கள் மற்றும், அனாதைப் பிள்ளைகள் மற்றும், அந்நியர் முறைகேடாக நடத்தப்படுவதற்கு எதிராகக் கூறப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இத்தகைய மக்களுக்கு கடவுளின் அன்புடன்கூடிய பராமரிப்பு இருந்தது, இதுவே, இஸ்ரவேல் கடவுளின் தனிப்பண்பாகும் என்றும், இதேபோல் கடவுளின் மக்களும் செயல்படுவதற்கு, ஒழுக்கமுறையிலான கடமையைக் கொண்டுள்ளனர் எனவும் திருத்தந்தை கூறினார்.

புலம்பெயர்ந்தோர் பற்றி மட்டும் அல்ல

“புலம்பெயர்ந்தோர் பற்றி மட்டும் அல்ல” என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருடன், சமுதாயத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்கள் ஆகிய எல்லாருமே தூக்கியெறியும் கலாச்சாரத்திற்குப் பலியானவர்கள் என்றும், அம்மக்களையும், நம் சமுதாயத்தையும் பேணிக்காக்குமாறு ஆண்டவர் அழைக்கின்றார் என்றும் கூறினார்.

போர்கள், ஆயுதங்கள்

புறக்கணிக்கப்படும் நிலைக்குக் காரணமான அநீதிகள் பற்றியும், சலுகை பெற்ற சிலரின் சந்தைகளின் நலனுக்காக, தங்கள் வளங்களை, வளரும் நாடுகள், எவ்வாறு தொடர்ந்து கறைந்துபோகச் செய்கின்றன என்பது பற்றியும் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, உலகின் சில பகுதிகள் மட்டும் போர்கள் பாதிக்கின்றன, ஆயினும், போர் ஆயுதங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு, ஏனைய பகுதிகளுக்கு விற்கப்படுகின்றன, இப்போர்களால் உருவாக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு அந்நாடுகள் விருப்பம் தெரிவிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

வசதியான கலாச்சாரம்

இன்பத்தில் திளைத்திருப்போர், கடவுளின் மக்கள் அழிக்கப்படுவது பற்றி கவலைப்படாமல் இருப்பது பற்றி, இறைவாக்கினர் ஆமோஸ் கூறுவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த 21ம் நூற்றாண்டிலும் வசதியான கலாச்சாரம், தங்களைப் பற்றியே நினைக்க வைக்கின்றது, துன்பத்தில் இருக்கும் சகோதரர், சகோதரிகளுக்குத் தங்கள் கண்களை மூட வைக்கின்றது என்றும் கூறினார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஏழ்மையின் பழைய மற்றும், புதிய துயரங்களுக்குப் பாராமுகமாய் இருத்தலாகாது என்றும், எண்ணற்ற அப்பாவி மக்களின் துன்பங்களின்முன் உணர்வற்று இருக்கக் கூடாது என்றும், அழுவதற்கும், இம்மக்களின் துன்பங்களுக்குப் பதில் சொல்வதற்கும் நாம் தவறக் கூடாது என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுளன்பும், அயலவர் அன்பும் பிரிக்க முடியாதது என்றும், இக்காலத்தில் நமக்கு ஓர் அன்னை தேவைப்படுகிறார் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரை அன்னை மரியின் பாதுகாப்பில் வைப்பதாக உரைத்து, மறையுரையை நிறைவு செய்தார்.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் அமைப்பின் ஒத்துழைப்புடன், இத்தாலிய ஆயர் பேரவை, இஞ்ஞாயிறு திருப்பலியை நடத்தியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2019, 13:00