திருத்தந்தையின் மூவேளை செப உரை - 220919 திருத்தந்தையின் மூவேளை செப உரை - 220919 

திருத்தந்தை- மக்கள், செல்வங்களைவிட மதிப்புமிக்கவர்கள்

பிறரின் கண்ணீருக்குக் காரணமானவர்கள், யாரையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள், நேர்மையற்று நடந்துகொண்டவர்கள், தேவையிலுள்ள யாருக்காவது உதவுங்கள் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

பொருள்களையும், செல்வங்களையும் உறவுகளாக மாற்றும்பொருட்டு, செல்வத்தோடு நட்புகொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 25, இஞ்ஞாயிறு நண்பகலில், மழை பெய்துகொண்டிருந்தபோதிலும், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரையில், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள, தந்திரமான மற்றும், அநீதியான வீட்டுப் பொறுப்பாளரை மையப்படுத்திப் பேசினார்.

வீட்டுத் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாகப் பழிசுமத்தப்பட்ட வீட்டுப் பொறுப்பாளர், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படும் சூழலை எதிர்கொண்டு, தனக்கு பாதுகாப்பான மற்றும், அமைதியான வருங்காலத்தை அமைத்துக்கொள்வதற்காக, தலைவரிடம் கடன்பட்டவர்களின் கடன்களைக் குறைத்து, அவர்களோடு நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் செயல்பட்டார்.

முன்மதி

இயேசு, இந்த வீட்டுப் பொறுப்பாளரை, நேர்மையற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வதைவிட, முன்மதியோடு செயல்படுவதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்கிறார், இக்கட்டான சூழல்களிலிருந்து வெளிவருவதற்கு அறிவும், சாமார்த்தியமும் தேவைப்படுவது பற்றி இயேசு சொல்கிறார் என்றார், திருத்தந்தை.

நேர்மையற்ற செல்வம்

நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள், ஏனெனில், அது தீரும்பொழுது, நீங்கள் நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள் என்று இயேசு, இந்த உவமையின் வழியாக நமக்கு அழைப்பு விடுக்கிறார் எனவும், திருத்தந்தை கூறினார்.  .

நேர்மையற்ற செல்வம் என்பது பணமாகும், சிலநேரங்களில் அது, சாத்தானின் சாணமாகவும் அறியப்படுகிறது என்றுரைத்த திருத்தந்தை, செல்வம், சுவர்களையும், பிரிவினைகளையும் எழுப்புவதற்கும், பாகுபாடுகளை அமைப்பதற்கும் இட்டுச்செல்லக்கூடும் என்று எச்சரித்தார்.

சுவர்கள்

எனவே, செல்வத்தோடு நட்பை உருவாக்கிக்கொள்ளவும், பொருள்களையும், வளங்களையும் உறவுகளாக மாற்றவும் இயேசு அழைப்பு விடுக்கிறார், ஏனெனில், பொருள்களைவிட மற்றும், வைத்திருக்கும் செல்வங்களைவிட மக்கள் மேலானவர்கள் என்று திருத்தந்தை கூறினார்.

இன்றைய நற்செய்தியில், நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர், பிரச்சனையை எதிர்கொள்கையில், நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார் என்றுரைத்த திருத்தந்தை, தோல்விகளை நாம் சந்திக்கையில், சரியான தருணத்தில் நன்மைகளை ஆற்றி, தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும், கண்ணீருக்குக் காரணமானவர்கள், யாரையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள், நேர்மையற்று நடந்துகொண்டவர்கள், தேவையிலுள்ள யாருக்காவது உதவுங்கள், இவ்வாறு அவர்கள் ஆண்டவரால் புகழப்படுவார்கள் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2019, 12:52