தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன்  கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ திருத்தந்தையுடன் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ  (Vatican Media)

திருத்தந்தை,முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ சந்திப்பு

கிறிஸ்தவ சபைகளுக்குள் இடம்பெறும் உரையாடல், இயேசு கிறிஸ்துவில் இந்த உலகம் மீட்புப்பெறும் வழிகளைப் பரிமாறிக்கொள்வதாகவும் அமைய வேண்டும் - முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்:வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களை, செப்டம்பர் 17, இச்செவ்வாய் நண்பகல் வேளையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனத்தில், "கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் சட்ட கழகம்" செப்டம்பர் 16, இத்திங்களன்று துவங்கியுள்ள 24வது பன்னாட்டு மாநாட்டில், திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்களும், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும், இயேசு சபை அருள்பணி டேவிட் நாசர் அவர்களும் உரையாற்றினார்கள்.

செப்டம்பர் 20, வருகிற வெள்ளி வரை நடைபெறும் இம்மாநாட்டில், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் மத்தியில் ஐம்பது ஆண்டுகாலச் சந்திப்புகள் பற்றியும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் திருஅவை சட்டம் எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றியும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கழகத்தின் வரலாறு பற்றி தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்ட முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், இந்த உலகு, முற்சார்பெண்ணங்கள், மூடநம்பிக்கை, அறியாமை, மற்றும், சகிப்பற்றதன்மையிலிருந்து விடுபடுவதற்கு உதவும் கிறிஸ்தவ செய்தி மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

எனவே கிறிஸ்தவ சபைகளுக்குள் இடம்பெறும் உரையாடல், சபைகளுக்குள் ஒன்றிப்பைக் கொணர்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல், இயேசு கிறிஸ்துவில் இந்த உலகம் மீட்புப்பெறும் வழிகளைப் பரிமாறிக்கொள்வதாகவும் அமைய வேண்டும் என்றும் கூறினார், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ.

17 September 2019, 16:02