மொசாம்பிக் அரசுத்தலைவரால் வரவேற்கப்பட்ட திருத்தந்தை மொசாம்பிக் அரசுத்தலைவரால் வரவேற்கப்பட்ட திருத்தந்தை 

மப்புத்தோவில் விமானநிலைய வரவேற்பு

1995ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, திருப்பீடத்திற்கும், மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே, தூதரக உறவுகள் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து மப்புத்தோவில் திருப்பீட தூதரகம் அமைக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 04, இப்புதன் காலை உரோம் நேரம் காலை 8 மணி 5 நிமிடங்களுக்கு, ஏறத்தாழ எழுபது பன்னாட்டு செய்தியாளர்களுடன், மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய மூன்று ஆப்ரிக்க மற்றும், இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளுக்கு, தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். A330 ஆல்இத்தாலியா விமானத்தில், 7,836 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த திருத்தந்தை, ஏற்கனவே குறிக்கப்பட்டதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே, மொசாம்பிக் நாட்டுத் தலைநகர் மப்புத்தோ பன்னாட்டு விமானத்தளத்தில் சென்றிறங்கினார். அப்போது உள்ளூர் நேரம் மாலை ஆறு மணியாகவும், இந்திய-இலங்கை நேரம், இப்புதன் இரவு 9.30 மணியாகவும் இருந்தது. விமான நிலையத்தில் மொசாம்பிக் அரசுத்தலைவர் Filipe Jacinto Nyusi அவர்கள், தனது துணைவியாருடன் திருத்தந்தையை வரவேற்றார். ஆயர்கள் பிரதிநிதிகளும், பாரம்பரிய உடைகளை அணிந்த இரு சிறார் மலர்க்கொத்துக்களுடனும், திருத்தந்தையை வரவேற்று வாழ்த்தினர். பொதுவாக ஆப்ரிக்க மக்கள் ஆடல்பாடல்களுக்குப் பெயர் போனவர்கள். மப்புத்தோ விமான நிலைய வரவேற்பிலும், இந்தப் பண்பைக் காண முடிந்தது. ‘நம்பிக்கை, அமைதி மற்றும், ஒப்புரவு’ எனும் இத்திருத்தூதுப் பயண தலைப்பை மையப்படுத்தியோ மக்கள் ஆடிப்பாடினர். திருத்தந்தைக்கு 21 துப்பாக்கிகள் முழங்க, அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதன் பின்னர், அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, திருப்பீடத் தூதரகத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருமருங்கிலும் திரளாகக் கூடிநின்று, மிகுந்த மகிழ்ச்சியுடன் திருத்தந்தையைக் கண்டு கையசைத்து வாழ்த்திக் கொண்டிருந்தனர். ஏறத்தாழ எல்லாரும், திருத்தந்தையின் உருவப்படம் பொறித்த ஆடைகளையே உடுத்தியிருந்தனர். மொசாம்பிக் மக்களின் இந்த மகிழ்வுநிறை வரவேற்பில் மகிழ்ந்து, திருப்பீடத் தூதரகத்தில், இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2019, 15:49