ஆல் இத்தாலியா விமானத்தில் செய்தியாளர்களுடன் திருத்தந்தை ஆல் இத்தாலியா விமானத்தில் செய்தியாளர்களுடன் திருத்தந்தை 

மொசாம்பிக் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

மொசாம்பிக் நாட்டில், 28 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 50 விழுக்காட்டினர் பாரம்பரிய மதங்களை வழிபடுவோர் மற்றும், 20 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.

மேரி தெரேசா – வத்திக்கான்

சமுதாயங்களின் விளிம்புகளின், புறநகரங்களின் திருத்தந்தை என அழைக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4, இப்புதனன்று, உலகின் மிக வறிய நாடுகளுக்குத் தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஆப்ரிக்காவிற்கு நான்காவது முறையாகச் செல்லும் திருத்தந்தை, இம்முறை  போர், ஏழ்மை மற்றும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய மூன்று இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளுக்கு, ஒரு வாரம் செல்கிறார். ஆப்ரிக்கா எங்கும், உடன்பிறப்பு உணர்வுடன்கூடிய ஒப்புரவு நிலவ செபியுங்கள், ஏனெனில், இத்தகைய ஒப்புரவே, உறுதியான மற்றும் நிலைத்த அமைதிக்கு ஒரே நம்பிக்கை என்று, ஹாஸ்டாக்குடன், டுவிட்டர் செய்தியையும் இப்புதன் காலையில் பதிவு செய்து செய்துள்ளார், திருத்தந்தை. மேலும், உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் ஆஸ்தாலி புலம்பெயர்ந்தோர் மையம் மற்றும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பிலிருந்து, கர்தினால் Konrad Krajewski அவர்கள் அழைத்து வந்திருந்த ஏறக்குறைய 12 பேரை, இப்புதன் காலை 7 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தார், திருத்தந்தை. அதற்குப் பின்னர்,  காலை 7.20 மணிக்கு, அங்கிருந்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்றார்.

மப்புத்தோ நகருக்குப் பயணம்

வவிமான நிலையத்தில், தன்னை வழியனுப்ப காத்திருந்த பல்வேறு திருஅவை மற்றும், அரசு அதிகாரிகளையும், விமானத்திற்குள் வரவேற்ற விமானப் பணிப்பெண்கள் மற்றும் ஓட்டுனரையும் வாழ்த்தி, காலை 8.05 மணியளவில், A330 ஆல் இத்தாலியா விமானத்தில் மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோவிற்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். A330 ஆல் இத்தாலியா விமானம், இப்பயணத்தையொட்டி, "Giovanni Battista Tiepolo" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் செய்யும் பன்னாட்டு செய்தியாளர்களையும் வாழ்த்தினார், திருத்தந்தை. 10 மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து, மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோ பன்னாட்டு விமானத்தளத்தில் திருத்தந்தை இறங்கும்போது உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியாகவும், இந்திய-இலங்கை நேரம், இப்புதன் இரவு 10 மணியாகவும் இருக்கும். இந்த நீண்ட பயணத்தில், தான் கடந்துசெல்லும், இத்தாலி, கிரேக்கம், எகிப்து, சூடான், தென் சூடான், உகாண்டா, டான்சானியா, மலாவி, சாம்பியா, ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் மேற்பரப்பில் விமானம் செல்கையில், செபமும், வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்திகளை அனுப்பினார் திருத்தந்தை. செப்டம்பர் 10, வருகிற செவ்வாய் வரை நடைபெறும் இந்த திருத்தூதுப்பயணத்தில், அந்நாடுகளில் நம்பிக்கை எனும் தீபத்தை மீண்டும் சுடர்விடச் செய்வார் மற்றும் அமைதிக்கு அழுத்தமாக அடித்தளம் அமைப்பார் என, நாம் உறுதியாக நம்பலாம்.

நம்பிக்கை, அமைதி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 54 நாடுகளைக் கொண்ட ஆப்ரிக்க கண்டத்தில், எகிப்து, கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் ஏற்கனவே திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். இப்போது திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த மூன்று ஆப்ரிக்க நாடுகளின் இப்பயண இலச்சினைகளில், நம்பிக்கை மற்றும், அமைதியே, பொதுவான தலைப்பாக உள்ளன. திருத்தந்தை முதலில் செல்லும் மொசாம்பிக் நாட்டில், “நம்பிக்கை, அமைதி, மற்றும் ஒப்புரவு” எனும் தலைப்பிலும், அடுத்து செல்லும் மடகாஸ்கரில், “அமைதி மற்றும் நம்பிக்கையை விதைப்பவர்” எனும் தலைப்பிலும், பயண நிகழ்வுகள் நடைபெறும். மூன்றாவது செல்லும் மொரீஷியஸ் நாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், நான் “அமைதியின் திருப்பயணியாக” வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இம்மூன்று நாடுகளின் அரசுத்தலைவர்கள், மற்றும் கத்தோலிக்கத் தலைவர்களின் அழைப்பின்பேரிலே, இந்நாடுகளுக்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணங்களில், திறந்தவெளி மைதானங்களில் திருப்பலி நிறைவேற்றுதல், பல்சமய உரையாடலில் ஈடுபடுதல், இளையோரைச் சந்தித்தல், அரசியல் தலைவர்களுக்கு உரையாற்றுதல், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியரைச் சந்தித்தல் என, பல்வேறு நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை. மொத்தத்தில், திருத்தந்தையின் இப்பயண நிகழ்வுகள் மேய்ப்புப்பணி இயல்பைக் கொண்டிருக்கின்றன. 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று செல்கின்ற நாடு மொசாம்பிக். இந்நாடு, இவ்வாண்டு மார்ச் 13ம் தேதி, இடாய் கடும் புயலாலும்,  இது நடந்து ஒரு மாதம் சென்று, ஏப்ரல் 25ம் தேதி கென்னத் புயலாலும், பாதிக்கப்பட்டுள்ளது. இடாய் புயல், ஆப்ரிக்காவையும், உலகின் தென் பகுதியையும் மிகக் கடுமையாய் புரட்டிப்போட்ட ஒன்றாகும். இவற்றில் மொசாம்பிக்கில் 600க்கும் அதிகமானோர் இறந்தனர். 73 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதமாகின. சொந்தங்களை, சொத்துக்களை இழந்து தவிக்கும் இம்மக்கள், திருத்தந்தையின் வருகையை மிகுந்த நம்பிக்கையோடும், ஆவலோடும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

மொசாம்பிக்

கிழக்கே இந்தியப் பெருங்கடலையும், வடக்கே டான்சானியாவையும், வடமேற்கே மலாவி மற்றும் சாம்பியாவையும், மேற்கே ஜிம்பாபுவே நாட்டையும், தென்மேற்கே, சுவாசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்காவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது மொசாம்பிக். இந்நாட்டின் கிழக்கேயுள்ள மொசாம்பிக் கால்வாய், மடகாஸ்கரை ஆப்ரிக்காவிலிருந்து பிரிக்கின்றது. இதன் நீண்ட கடற்கரை,  ஆப்ரிக்காவின் சிறந்த சில இயற்கைத் துறைமுகங்களைக் கொண்டுள்ளது. இவை, இந்தியப் பெருங்கடல் வழியாக கடல்வழி வர்த்தகம் வளர முக்கிய பங்காற்றுகின்றன. அதேநேரம், இந்நாட்டின் வெண்மைநிற மண் கடற்கரைகளும் சுற்றுலா தொழில் வளர முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இந்நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலுள்ள வளமான மண், பலவகையான வேளாண்மைக்கும் உதவுகின்றது. அதோடு, இந்நாட்டில் பாயும் பெரிய ஜாம்பெசி நதி, பயிர்த்தொழிலுக்கும், நீர்மின்சாரம் எடுப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது.

பொருளாதாரம்

மேலும், மொசாம்பிக் நாட்டில், உணவு உற்பத்தியைத் தவிர, வேதியப் பொருள் உற்பத்தி, அலுமினியம் மற்றும் பெட்ரோலியம் உற்பத்தியும் அதிகம். இந்நாடு, தென்னாப்ரிக்காவுடன் வர்த்தகத்தை நடத்தினாலும், பெல்ஜியம், போர்த்துக்கல், மற்றும் இஸ்பெயின் நாடுகளும் முக்கிய பொருளாதார பங்கீட்டாளர்களாக உள்ளன. 2001ம் ஆண்டிலிருந்து, இந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டில், மொசாம்பிக் கடற்கரையில், எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது, இந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவியுள்ளது. இயற்கை வளங்கள் இவ்வளவு இருந்தும், மொசாம்பிக் நாடு, உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நாட்டின் 2 கோடியே 40 இலட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். கல்வியறிவின்மை, எய்ட்ஸ் நோய், போதைப்பொருள் போன்ற பிரச்சனைகளும் நிறையவே உள்ளன.

மொசாம்பிக் வரலாறு

முதல் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், Bantu மொழி பேசும் மக்கள், தற்போதைய மொசாம்பிக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் குடியேறினர். 7ம் மற்றும் 11ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சுவாஹிலி மொழி பேசும் மக்கள் துறைமுக நகரங்களில் குடியேறினர். இதனால் இந்த மொழியும், கலாச்சாரமும் வளர்ந்தன. மத்திய காலத்தின் பிற்பகுதியில், இந்த நகரங்களுக்கு, சொமாலியா, எத்தியோப்பியா, எகிப்து, அரேபியா, பெர்சியா மற்றும் இந்திய வர்த்தகர்கள் அடிக்கடி வந்து சென்றனர். 1498ம் ஆண்டில் வாஸ்கோடகாமா, இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். இவர்கள், 1510ம் ஆண்டுவாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த, அனைத்து முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை வைத்தே, இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. போர்த்துகீசியர்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாக, மொசாம்பிக்கில் காலனி ஆதிக்கத்தைக் கொண்டிருந்தனர்.

காலனி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு

ஆப்ரிக்கா எங்கும் கம்யூனிச மற்றும், காலனி எதிர்ப்பு கருத்தியல்கள் பரவிவந்தவேளை, மறைந்திருந்து செயல்படும் பல இயக்கங்கள், மொசாம்பிக் விடுதலைக்கு ஆதரவாக உருவாயின. மொசாம்பிக்கில் இருந்த வெள்ளையினத்தவர், அந்நாட்டிலிருந்த பெரும்பான்மை பூர்வீக இனத்தவரைவிட செல்வத்திலும், திறமைகளிலும் சிறந்து விளங்கினர். பூர்வீக இனத்தவர், தங்களின் பொருளாதார மற்றும் சமுதாய நிலையை உயர்த்துவதற்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்புப் பெற்றனர். எனவே FRELIMO எனப்படும், மொசாம்பிக் விடுதலை இயக்கம் என்ற கெரில்லா அமைப்பு, 1964ம் ஆண்டு செப்டம்பரில் கெரில்லா புரட்சியைத் தொடங்கி வைத்தது. இதனால் 1960கள் மற்றும் 1970களின் துவக்க காலங்களில் புதிய பொருளாதார வளர்ச்சிகளில் மெல்ல மெல்ல மாற்றங்களைப் புகுத்தியது போர்த்துக்கீசிய அரசு. போர்த்துக்கீசிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஏற்கனவே அங்கோலாவிலும் கினியாவிலும் நடந்துகொண்டிருந்த புரட்சி மொசாம்பிக்கிலும் வெடித்தது. இறுதியில், மொசாம்பிக், 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி விடுதலையடைந்தது. நாட்டின் விடுதலைக்குப்பின் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் போர்ச்சூழலிலேயே ஆட்சிசெய்த FRELIMO அமைப்பு, போர்த்துக்கீசியர்களை, 24 மணி நேரங்களுக்குள், 20 கிலோ கிராம் பொருள்களுடன் மொசாம்பிகிலிருந்து வெளியேற வேண்டுமென கட்டளையிட்டது. அந்நாட்டிலிருந்த 2,50,000 போர்த்துக்கீசியரில் பெரும்பாலானவர்கள், ஓராண்டுக்குள் நாட்டைவிட்டு வெளியேறினர்.

அமைதி ஒப்பந்தம்

இதற்கு இரு ஆண்டுகளுக்குப்பின், கம்யூனிசத்திற்கு எதிரான RENAMO புரட்சிப் படைக்கும், கம்யூனிச கொள்கையுடைய FRELIMO அரசுக்கும் இடையே, 1977ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை, கடும் போர் நடந்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்தப் போரில், நாட்டின் உள்நாட்டு கட்டமைப்பு சீரழிந்தது. தனியார் தொழில் மையங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. நாடெங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. 30 இலட்சம் முதல், 40 இலட்சம் பேர் வரை அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடினர். பத்து இலட்சம் பேர் உயிரிழந்தனர். இறுதியில், 27 மாதங்கள் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர், 1992ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி உரோம் நகரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியதில், சான் எஜிதியோ அமைப்பு உட்பட, கத்தோலிக்க திருஅவை பெரும்பங்காற்றியது. 1994ம் ஆண்டில் முதல் சுதந்திரத் தேர்தல்கள் நடந்தன. அதிலும், FRELIMO அமைப்பே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1995ம் ஆண்டில், மொசாம்பிக் காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இணைந்தது. இதன் மூலம், இவ்வமைப்பில் இணைந்த, பிரித்தானிய காலனியைச் சேராத முதல் நாடு என்ற பெயரையும் மொசாம்பிக் பெற்றது. 2004ம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

2014க்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மீண்டும், ஆயுத மோதல்கள் நடந்தன. புதிய அமைதி ஒப்பந்தத்தின் மூலம், 2014ம் ஆண்டு செப்டம்பரில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அக்டோபர் 15ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது. ஐந்தாயிரம் புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவித்தனர். ஆயினும் அந்நாட்டில் Shebabs எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மீண்டும், நாட்டின் நிலையான தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. இந்நாட்டில், போர்த்துக்கீசியம் அதிகாரப்பூர்வ மொழியாகும். அதோடு, பல பூர்வீக இனங்களின் மொழிகளும் பேசப்படுகின்றன. இங்கு வாழ்பவர்களில் 98 விழுக்காட்டினர் ஆப்ரிக்கர்கள். ஆப்ரிக்க வெள்ளையினத்தவரும், ஆசியர்களும், மற்ற இனத்தவரும் உள்ளனர். இந்நாட்டில் 28 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்,  50 விழுக்காட்டினர் பாரம்பரிய மதங்களை வழிபடுவோர் மற்றும், 20 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 

சுற்றுலாத்தளம்

மொசாம்பிக் 'அருமையான சுற்றுலாத்தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும், குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டுமன்றி கடல்வாழ் மிருகங்களும் உண்டு. இங்கு கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள், மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீசிய கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.

கிறிஸ்தவம்

போர்த்துக்கீசியர்கள் மொசாம்பிக்கில் குடியேறியதிலிருந்து கிறிஸ்தவமும் நுழைந்தது. 1560ம் ஆண்டு முதல் 1783ம் ஆண்டு வரை, இயேசு சபை, தொமினிக்கன் சபை, புனித இறை யோவான் அருள்சகோதரர்கள் சபை, அகுஸ்தீனியன், பிரான்சிஸ்கன், இன்னும் கோவாவிலிருந்து கப்புச்சின் என துறவு சபைகள் பணியாற்றத் தொடங்கின. அதைத் தொடர்ந்து 1940ம் ஆண்டுவரை துறவற அருள்சகோதரிகளும் இறைப்பணியாற்றத் தொடங்கினர். அதேநேரம் அடக்குமுறைகளையும் அவர்கள் சந்தித்தனர். 1940ம் ஆண்டு முதல், 1975ம் ஆண்டு வரை, மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது மொசாம்பிக்கில், 3 உயர்மறைமாவட்டங்களும், 9 மறைமாவட்டங்களும் உள்ளன. 60 இலட்சத்திற்கு அதிகமான கத்தோலிக்கர் உள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இந்த 31வது திருத்தூதுப் பயணம், மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளில் அமைதிக்கான நம்பிக்கையை ஒளிரச்செய்யும் என நம்புவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2019, 15:47