பானமாவில் இளையோருக்கு உரை வழங்கிய திருத்தந்தை (கோப்பு படம்) பானமாவில் இளையோருக்கு உரை வழங்கிய திருத்தந்தை (கோப்பு படம்) 

2020ம் ஆண்டு மே 14ல் வத்திக்கானில் உலகளாவிய கல்வி மாநாடு

வத்திக்கான் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், 2020ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி, உலகளாவிய கல்வி மாநாட்டில் நடைபெறவிருக்கின்றது. இதில் கலந்துகொள்ள திருத்தந்தை இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2020ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும், இளையோர் கல்வி பற்றிய உலகளாவிய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, நம் இளையோரின் வருங்காலத்தில் அக்கறையுள்ள பொதுநலத் தலைவர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

ஒரு புதிய மனித சமுதாயம் அமைப்பதற்கும், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்குமெனவும் துவங்கப்படும், கல்வி பற்றிய உலகளாவிய ஒப்பந்த கூட்டமைப்புக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, செப்டம்பர் 12, இவ்வியாழனன்று செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை எவ்வாறு வடிவமைக்கப் போகிறோம் என்பது பற்றியும், அனைவரின் திறமைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், கலந்துரையாடல் நடத்துவதற்கு தான் அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வத்திக்கான் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், 2020ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி நடைபெறவிருக்கும் உலகளாவிய கல்வி மாநாட்டில் இளையோர் கலந்துகொண்டு, சிறந்ததோர் உலகை அமைப்பதில் அவர்களின் உண்மையான பொறுப்புணர்வை அறிந்துகொள்ளுமாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்வி மற்றும், ஆய்வுத் துறைகளில், பல்வேறு வழிகளில், பல்வேறு நிலைகளில், பணியாற்றும் எல்லாரையும் இம்மாநாட்டில் சந்திப்பதற்கு ஆவலாய் உள்ளேன் எனவும், கல்வி பற்றிய உலகளாவிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ள திருத்தந்தை, கல்வி கூட்டமைப்பில் பங்கெடுத்து, சிறந்ததோர் வருங்காலத்தை  ஊக்குவிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

“கல்வி கிராமம்”

இன்றைய உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது மற்றும், பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது, ஒவ்வொரு மாற்றமும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கல்விமுறைக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், ஒவ்வொருவரும் மனித உறவுகளை உருவாக்கும் கடமையில், தங்களின் தகுதியுடன், பங்குகொள்கின்ற, “கல்வி கிராமம்” ஒன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கூட்டமைப்பு என்பது, இப்பூமியில் வாழ்கின்றவர்கள் மற்றும், நம் பொதுவான இல்லத்திற்கிடையேயுள்ள உடன்பாட்டு அமைப்பாகும், இந்த அமைப்பில், நாம்  நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாத்து மதிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம், இந்த கூட்டமைப்பு, அனைத்து மக்களிடையே அமைதி, நீதி மற்றும், விருந்தோம்பலையும்,  மதங்களுக்கு இடையே கலந்துரையாடலையும் பிறப்பிக்கிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

சேவையே, சந்திப்பு கலாச்சாரத்தின் தூண்

இதற்கு, முதலில், மனிதரை மையப்படுத்தவும், இரண்டாவது, நமது சக்திகள், படைப்பாற்றல், மற்றும் பொறுப்புணர்வை எல்லாருக்கும் பயன்படுத்தவும் துணிச்சல் தேவைப்படுகின்றது, மூன்றாவது, நம் சமுதாயத்திற்குச் சேவையாற்ற நம்மைக் கையளிப்பதற்குத் தயாராகும் மனிதர்களைத் தயாரிக்கத் துணிச்சல் தேவைப்படுகின்றது, சேவையே, சந்திப்பு கலாச்சாரத்தின் தூண் என்றும், திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 16:01