தேடுதல்

Vatican News
கீழை வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டக் கழகத்தினர் சந்திப்பு கீழை வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டக் கழகத்தினர் சந்திப்பு  (ANSA)

திருஅவை சட்டம், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு அவசியம்

திருஅவை நிறுவனங்கள் மற்றும், திருஅவையின் நடைமுறைகளில், கூட்டுப்பண்பு செயல்படுத்தப்படுகையில், திருஅவை சட்டத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வெளிப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்:வத்திக்கான் செய்திகள்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்தவுடன் ஆரம்பிக்கப்பட்ட, கீழை வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டக் கழகம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் போன்ற பல்வேறு திருஅவைகளை ஒன்றிணைத்துள்ள இக்கழகம், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு உதவுவதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றும், திருத்தந்தை தெரிவித்தார்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டக் கழகத்தின் ஏறத்தாழ எண்பது பிரதிநிதிகளை, செப்டம்பர் 19, இவ்வியாழன் நண்பகலில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை சட்டம், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு இன்றியமையாதது என்று கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை நடத்துகின்ற, குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ் சபையினர், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுடன் நடத்துகின்ற பல இறையியல் உரையாடல்கள், திருஅவை இயல்பைக் கொண்டிருக்கின்றன எனவும், திருத்தந்தை கூறினார்.

திருஅவை நிறுவனங்கள் மற்றும், திருஅவையின் நடைமுறைகளில், கூட்டுப்பண்பு செயல்படுத்தப்படுகையில், திருஅவை சட்டத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வெளிப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, உரையாடல், ஏனைய திருஅவைகள் பற்றி நன்றாக அறிந்து கொள்ள உதவுகின்றது எனவும் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் இடையே, முதல் ஆயிரம் ஆண்டுகளில் நிலவிய பொதுவான திருஅவை சட்டப் பாரம்பரியத்தின் அடிப்படையில், தற்போது இவ்விரு திருஅவைகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் இறையியல் உரையாடல்கள், திருஅவையின் ஒன்றிப்புப் பணியில், இவற்றுக்கிடையேயுள்ள உறவுகள் பற்றி புரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருகின்றன என்று, திருத்தந்தை கூறினார்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைச் சட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ள அருள்பணி Ivan Žužek அவர்கள், இக்கழகத்தை 1969ம் ஆண்டில் ஆரம்பித்தார்.

19 September 2019, 15:16