தேடுதல்

Vatican News
மொரீஷியசில் அரசு, தூதரக அதிகாரிகள் சந்திப்பில் திருத்தந்தை மொரீஷியசில் அரசு, தூதரக அதிகாரிகள் சந்திப்பில் திருத்தந்தை  (Vatican Media)

மொரீஷியஸ் திருத்தூதுப்பயணம், நாட்டிற்கு ஆசீர்வாதம்

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், மொரீஷியஸ்க்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இத்திங்கள் மாலை 5 மணியளவில் மொரீஷியஸ் அரசுத்தலைவர் மாளிகையில் இடைக்கால அரசுத்தலைவர் Paramasivum Pillai Barlen Vyapoory அவர்கள்,  திருத்தந்தையை வரவேற்றார். அரசுத்தலைவரையும், பிரதமர் Pravind Kumar Jugnauth அவர்களையும், தனித்தனி அறைகளில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. பரிசுப்பொருள்களையும் பரிமாறிக்கொண்டனர். அரசுத்தலைவர் மற்றும், பிரதமர் குடும்பத்தினர், இந்திய மரபில் சேலையணிந்திருந்ததைப் பார்த்தபோது, இந்நாட்டில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர் எனவும் உணர முடிந்தது. விருந்தினர் புத்தகத்திலும் திருத்தந்தை கையெழுத்திட்டார். பின்னர், மொரீஷியஸ் நாட்டு அரசு, தூதரக, சமுதாய மற்றும் பல்சமயத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இச்சந்திப்பை நிறைவுசெய்து, அங்கிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள விமான நிலையம் சென்று, மடகாஸ்கர் நாட்டிற்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரதமர் Pravind Jugnauth அவர்கள், விமானம் வரை சென்று திருத்தந்தையை வழியனுப்பி வைத்தார். திருத்தந்தையின் மொரீஷியஸ் திருத்தூதுப்பயணம், நாட்டிற்கு ஆசீர்வாதம் என்று, அந்நாட்டு ஆங்லிக்கன் பேராயர் Ian Ernest அவர்கள் கூறியுள்ளார்.

790 சதுர மைல்களைக் கொண்ட இத்தீவு நாட்டில், ஏறத்தாழ 13 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் 28 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இஸ்லாம், புத்த மற்றும், இந்து மதத்தவர்களும் உள்ளனர். இந்நாட்டில் பூர்வீக மக்கள் என்பவர்களே கிடையாது. இங்கு மேற்கு ஐரோப்பியர்கள் முதலில் காலனியைத் தொடங்கினர். பின்னர், அந்நாடு, ஆசியா மற்றும், ஆப்ரிக்காவிலிருந்து குடியேறிய மக்கள்வசம் வந்தது. 1598ம் ஆண்டில் டச்சுக்காரர்கள் முதலில் இத்தீவில் காலனியை அமைத்தபோது, மனிதர்களை அல்ல, dodo  என்ற பறவையையே பார்த்துள்ளனர். இன்று உலகின் பல பகுதிகளில், இனங்கள், மற்றும் மதங்களை மையப்படுத்தி கலவரங்களும், வன்முறை மோதல்களும் இடம்பெற்றுவரும்வேளை, மொரீஷியஸ் நாட்டில், பல்வேறு இன, மத மற்றும் கலாச்சார மக்கள், நல்லிணக்கத்துடன் அமைதியில் வாழ்ந்து வருவதே இந்நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றது.

மடகாஸ்கர், Antananarivo நகரிலுள்ள திருப்பீட தூதரகத்திற்கு, இத்திங்கள் இரவு 7.30 மணியளவில் செல்வார் திருத்தந்தை. செப்டம்பர் 10, இச்செவ்வாய் காலை 7 மணிக்கு திருப்பலி நிறைவேற்றியபின், காலை 9.20 மணிக்கு, Antananarivo நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நேரம் இந்திய நேரம் பகல் 11.50 மணியாக இருக்கும். அன்று இரவு 7 மணியளவில் உரோம் வந்துசேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன், மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளுக்கு, அவர் மேற்கொண்ட ஒரு வாரப் பயணம் முற்றுப்பெறும்.

09 September 2019, 16:17