தேடுதல்

Vatican News
மடகாஸ்கரில் திருத்தந்தைக்கு வரவேற்பு மடகாஸ்கரில் திருத்தந்தைக்கு வரவேற்பு   (Vatican Media)

மொசாம்பிக்கிலிருந்து மடகாஸ்கர் சென்ற திருத்தந்தை

மொசாம்பிக் நாட்டினரிடம் திருத்தந்தை - நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. நம்பிக்கையில் உறுதியாயிருங்கள். அதை எவரும் திருடிச்சென்றுவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

இத்திருப்பலியின் இறுதியில், இத்திருத்தூதுப்பயணத்தின் ஏற்பாடுகளைச் செய்வதற்கு, மொசாம்பிக் மக்கள் செய்துள்ள தியாகங்களைப் புகழ்ந்து அனைவருக்கும் நன்றி சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் துன்புற்றுள்ள நீங்கள், அண்மையில் கடும் புயல்களாலும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. நம்பிக்கையில் உறுதியாயிருங்கள். அதை எவரும் திருடிச்சென்றுவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். ஒன்றிணைந்து இருப்பதற்கு, நம்பிக்கையைவிட வேறு சிறந்த வழி எதுவும் கிடையாது. இதுவே, மொசாம்பிக்கில், வருங்காலத்தில் அமைதி மற்றும் ஒப்புரவுக்கு உதவும். உங்கள் அனவரையும் அன்னை மரியாவின் பாதுகாவலில் அர்ப்பணிக்கின்றேன். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்குக் காரில் சென்ற திருத்தந்தையை, கொட்டிக் கொண்டிருந்த மழையில், காவல்துறை அணிவகுப்புடன் அழைத்துச் சென்றது. மொசாம்பிக் அரசுத்தலைவர் Filipe Jacinto Nyusi அவர்கள், தனது துணைவியாருடன் விமானம் உள்ளே சென்று திருத்தந்தையை வழியனுப்பி வைத்தார். ஆயர்கள் மற்றும், அரசு அதிகாரிகளும் திருத்தந்தையை வழியனுப்பினர். இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அங்கிருந்து மடகாஸ்கர் நாட்டிற்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குமுன்னதாக, “மொசாம்பிக் அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நம்பிக்கையைக் காத்துக்கொள்ளுங்கள். ஒப்புரவு மற்றும் அமைதி நிறைந்த வருங்காலத்திற்காக, ஒன்றிப்பில் நிலைத்திருங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்னையாம் புனித கன்னி மரியா உங்களைப் பாதுகாப்பாராக!” என்ற சொற்களை, ஹாஸ்டாக்குடன் (#ApostolicJourney #Mozambique) தன் டுவிட்டர் செய்தியிலும், மொசாம்பிக்கைவிட்டுச் செல்கையில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மப்புத்தோவிலிருந்து 2 மணி 50 நிமிடங்கள் பயணம் செய்து மடகாஸ்கர் தலைநகர் Antananarivo சென்று சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இவ்வெள்ளி உள்ளூர் நேரம், மாலை 4.30 மணியாகவும், இந்திய இலங்கை நேரம் மாலை 7 மணியாகவும் இருந்தது.  

இயற்கை வளங்களும், அதேநேரம் ஏழ்மையும் நிறைந்த, கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய மொசாம்பிக் மக்கள், திருத்தந்தை உருக்கமாக அழைப்பு விடுத்துள்ள, அமைதி, நம்பிக்கை, மற்றும் ஒப்புரவைச் செயல்படுத்துவார்கள் என நம்புவோம். அதற்காகச் செபிப்போம்.

06 September 2019, 16:17