மப்புத்தோ அமலமரி பேராலயத்தில் திருத்தந்தை மப்புத்தோ அமலமரி பேராலயத்தில் திருத்தந்தை 

மப்புத்தோ அமலமரி பேராலயத்தில் திருத்தந்தை

மொசாம்பிக் மேய்ப்புப்பணியாளர்களிடம் திருத்தந்தை - மோதல்கள் மற்றும் பிரிவினைகளின் அங்கமாகச் செயல்படாமல், மக்களைச் சந்தித்து, உரையாடலை ஊக்குவியுங்கள், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

அமைதி, நம்பிக்கை, ஒப்புரவு ஆகிய தலைப்புகளில், மப்புத்தோ நகரில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நடத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 5, இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, அந்நகரின் அமலமரி பேராலயத்திற்குச் சென்றார். இப்பேராலயம், பிரான்சின் பாரிஸ் நகரிலுள்ள, நோத்ரு தாம் பேராலய வடிவில், 1936ம் ஆண்டில் கட்டத் துவங்கப்பட்டு, 1944ம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது. இப்பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ பயிற்சி மாணவர்கள், வேதியர்கள் மற்றும், பொதுநிலைக் கத்தோலிக்கத் தலைவர்கள் என, ஏறத்தாழ 2,500 பேர் அமர்ந்திருந்தனர். திருத்தந்தை பேராலயத்தில் நுழைந்த சமயத்தில், “திருத்தந்தை பிரான்சிஸ்” என்று அனைவரும் பாடிக்கொண்டிருந்தனர். செபச்சூழலில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலில், ஒரு குருத்துவ மாணவரும், ஒரு பொதுநிலை தலைவரும், மலர்களை அன்னைமரிக்கு அர்ப்பணித்தனர். அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக, சிறிது நேரம் திருத்தந்தை அமைதியாகச் செபித்தார். அதன்பின்னர், அருள்சகோதரிகளும், பெண்களும் பலிபீடத்தின் முன்பாக நடனமாடினர். அதற்குப் பிறகு, ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்சகோதரி, ஒரு வேதியர் ஆகிய மூவரும் சான்று பகர்ந்தனர். அவர்கள் திருத்தந்தையிடம், பரிசுப் பொருளையும் கொடுத்தனர். அதற்குப் பிறகு, திருத்தந்தை ஆற்றிய நீண்ட உரையில், இயேசுவின் அழைப்பைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். மோதல்கள் மற்றும் பிரிவினைகளின் அங்கமாகச் செயல்படாமல், மக்களைச் சந்தித்து, உரையாடலை ஊக்குவியுங்கள், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள் என்று, மொசாம்பிக் திருஅவையின் இந்த மேய்ப்புப்பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் இறுதியிலும் அனைவரும், “திருத்தந்தை பிரான்சிஸ் என்று அனைவரும் பாடிக்கொண்டிருந்தனர். இச்சந்திப்பிற்குப் பின்னர், அங்கிருந்து காரில், ‘மத்தேயு 25’ எனப்படும் பிறரன்பு இல்லத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2019, 16:32