தேடுதல்

Vatican News
ஆழ்நிலை தியான கார்மேல் சபையின் அருள்சகோதரிகள் ஆழ்நிலை தியான கார்மேல் சபையின் அருள்சகோதரிகள்  (Vatican Media)

கார்மேல் ஆழ்நிலை தியான துறவு சபை இல்லத்தில் திருத்தந்தை

1927ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, பெல்ஜியம் மற்றும், பிரசல்ஸ்ஸிலிருந்து, காலணி அணியாத ஆழ்நிலை தியான கார்மேல் சபையின் பத்து அருள்சகோதரிகள், மடகாஸ்கர் தலைநகரின் புறநகர் பகுதிக்கு, முதன் முதலில் வந்தனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

மடகாஸ்கர் “Iavoloha” அரசுத்தலைவர் மாளிகையில் சந்திப்பை முடித்து, மீண்டும் 15 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து, அந்நகரின், காலணி அணியாத கார்மேல் ஆழ்நிலை தியான துறவு சபை இல்லத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, நண்பகல் திருப்புகழ்மாலை செப நிகழ்வு நடைபெற்றது. மடகாஸ்கர் நாடு முழுவதிலுமிருந்த வந்திருந்த ஏறத்தாழ 100 அருள்சகோதரிகளும், 70 பயிற்சிநிலையில் இருப்போரும் இச்செப நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், இல்லத்தலைவர் அன்னை மதலேன் அவர்கள் திருத்தந்தையை வரவேற்று பேசினார். அதன்பின்னர், திருத்தந்தையும், தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்த நேரத்தில் தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்தார். புனித குழந்தை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துரைத்த திருத்தந்தை, இப்புனிதர், வயதுமுதிர்ந்த ஒரு சகோதரிக்கு உதவிசெய்தவேளை, அந்த வயதானவர் தொடர்ந்து புகார் சொல்லிக்கொண்டிருந்தாலும், தெரேசா, நேரங்களிலும் அவர் புன்னகையுடனே இருந்தார் என்றார். சிறு சிறு அன்புச் செயல்கள், இவ்வுலகைக் காப்பாற்றும் என்றும் திருத்தந்தை கூறினார். தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை பின்னர் சகோதரிகளுக்கு விநியோகிக்கச் சொல்வதாகவும் திருத்தந்தை கூறினார். மடகாஸ்கர் தலைநகரின் புறநகர் பகுதிக்கு, 1927ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பெல்ஜியம் மற்றும், பிரசல்ஸ்ஸிலிருந்து கார்மேல் சபை 10 அருள்சகோதரிகள் முதன் முதலில் வந்தனர். 1937ம் ஆண்டில்தான் ஒரு சிறிய குழுமமாக அவர்களால் அமைக்க முடிந்தது.  இந்நிகழ்வின் இறுதியில், மொரோன்தாவா பேராலயத்திற்கு, பலிபீடக் கல்லையும் திருத்தந்தை அர்ச்சித்தார். இதற்குப்பின், திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Andohalo பேராலயத்தில், ஆயர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அவர்களுக்கு உரையும் ஆற்றினார். அதற்குப் பின்னர், அருளாளர் Victoire Rasoamanarivo கல்லறையைச் சந்தித்து செபித்தல், இளையோர் திருவிழிப்பில் பங்குகொண்டு உரையாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இத்துடன், மடகாஸ்கரில் சனிக்கிழமை பயண நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன. இஞ்ஞாயிறன்றும் இந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, வருகிற திங்கள் காலையில் மொரீஷியஸ் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

07 September 2019, 15:45