தேடுதல்

Vatican News
மடகாஸ்கரில் இளையோருடன் திருத்தந்தை மடகாஸ்கரில் இளையோருடன் திருத்தந்தை  (AFP or licensors)

மடகாஸ்கர் இளையோரிடம் - உங்களுக்கென ஒரு பணி உள்ளது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தானனரிவோவிலுள்ள, Soamandrakizay மறைமாவட்ட மைதானத்தில், மடகாஸ்கர் இளையோருடன் திருவிழிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இதில், சிறைப் பணியிலும், மறைப்பணியிலும் ஏற்பட்ட அனுபவங்களைப் இரு இளையோர் பகிர்ந்துகொண்டனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்த அழகான மடகாஸ்கர் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கூடியிருக்கும் என் அன்பு இளையோரே, உங்களில் பலர், சிரமப்பட்டு இங்கு வந்துள்ளீர்கள். உங்களின் வரவேற்பிற்கு நன்றி. பேரார்வத்தோடு நீங்கள் பாடிய பாடல்கள் மற்றும், பாரம்பரிய நடனங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள் பல. விசுவாசத்தை வாழ்கின்ற இளையோராகிய உங்களைச் சந்திப்பது அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றது. விசுவாசம் தேங்கி கிடப்பது

விசுவாசம் தேங்கி கிடப்பது அல்ல. அது பகிரப்பட வேண்டியது. இதனாலேயே ஒவ்வோர் இளையோரையும், ‘தேடுகிறவராக’ நான் நினைத்துப் பார்க்கிறேன். “என்ன தேடுகிறீர்கள்?” (யோவா.1:38) என்று, யோர்தான் ஆற்றங்கரையில், இயேசு தம் முதல் சீடர்களைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வியை நினைவில் வைத்திருக்கின்றீர்களா? நாம் மகிழ்வாக வாழப் படைக்கப்பட்டிருக்கிறோம். அந்த மகிழ்வையே தேடுகிறோம் என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் மகிழ்வைத் தேடுகிறீர்கள். அதை உங்களிடமிருந்து யாராலும் எடுத்துவிட முடியாது. நம்பிக்கை மற்றும், சவால்களுடன் தேடலில் ஈடுபட்டுள்ள Rova Sitraka மற்றும்,Vavy Elyssa ஆகிய இரு இளையோரின் பகிர்வைக் கேட்டோம்.

தேடல் பயணம்

விசுவாசத்திலிருந்து பிறக்கும் எந்த ஒரு தேடலும், நற்செய்திக்கு ஒத்திணங்கி, இந்த உலகை, நாம் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக அமைப்பதற்கு உதவுகின்றது. நாம் பிறருக்காக என்ன செய்கின்றோமோ, அதுவே நம்மை மாற்றுகின்றது. நம் பார்வையையும், மக்களைத் தீர்ப்பிடுவதையும் அது மாற்றுகின்றது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பவர்களாய் நம்மை ஆக்குகின்றது. நம் வாழ்வின் அங்கம், ஆண்டவர் என்பதை, புரிந்துகொள்ளவும், கண்டுகொள்ளவும் அது உதவுகின்றது.

பெயர்சொல்லி அழைப்பு

நம் பாவங்கள், தவறுகள், குறைகள் அல்லது, நம் வரையறைகளை வைத்து, நம் ஆண்டவர் நம்மை அழைப்பதில்லை. அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அவரது கண்களுக்கு நாம் எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறார். அதோடு, ஒரு பணியையும் நம்மிடம் அவர் ஒப்படைக்கிறார். 

Rovaவின் சிறைப்பணி பகிர்வு பற்றி திருத்தந்தை

ரோவா, நீங்கள் கைதிகளைச் சந்திப்பதற்கு நீண்ட காலமாக ஆவல்கொண்டுள்ளதாகச் சொன்னீர்கள். உங்களது வாழ்வு ஒரு மறைப்பணி என்பதை உணர்கிறீர்கள். நம்மை எப்போதும் முடக்கிப்போடும் விமர்சனங்களைப் புறக்கணித்துள்ளீர்கள். சிறையில் இருப்போரில் பெரும்பான்மையினோர் தீயவர்கள் அல்ல, ஆனால் அவர்கள், தீயவைகளைத் தேர்ந்துகொண்டவர்கள் என்பதையும், அவர்கள் தவறான பாதையை எடுத்தார்கள், தற்போது, புதிய பாதையைத் துவங்க ஆர்வமாய் இருக்கின்றனர் என்பதையும் உணர்ந்துள்ளீர்கள். ஆம். இயேசுவோடு நாம் கொள்ளும் நட்புறவில் அவர் நமக்கு வழங்கும் மிக அழகான கொடைகளில் ஒன்று, அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார், அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை என்பதே. போலியானவைகளைப் பின்தொடர்ந்தால் நம் வாழ்வு கசப்பாக அமையும் என்பதை அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறோம். இது ‘உனது பாதையல்ல’ என்று நமக்கு முதலில் சொல்பவர் ஆண்டவர்.

அழுக்காக்க அஞ்ச வேண்டாம்

மடகாஸ்கர் இளையோரே, இங்கும், இப்பொழுதும், மறைப்பணி சீடர்களாக வாழ ஆண்டவர் உங்களை அழைக்கிறார். சுறுசுறுப்பற்ற, உணர்ச்சியற்ற, ஆர்வமில்லாதவர்களாக உங்களை உறங்க வைக்கும் அனைத்து தாலாட்டுக் குரல்களையும் முதலில் புறக்கணிப்பவர் அவர். நம் கரங்களை அழுக்காக்க அஞ்ச வேண்டாம் என அவர் சொல்கிறார். உங்களில் முதலில் நம்பிக்கை வைப்பவர் ஆண்டவர். அதேநேரம், உங்களிலும், உங்கள் திறமைகளிலும், சக்தியிலும் நம்பிக்கை வைக்குமாறு உங்களை அவர் கேட்கிறார். ஒருவரையெருவர் உற்சாகப்படுத்தவும், உங்கள் வாழ்வின் மிக அழகான பக்கங்களை எழுதுவதில் அவரோடு இணையவும் அவர் கேட்கிறார். இயேசு உங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? இளையோரே, இயேசு என் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? என்று, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் தனியே இல்லை

நம்மால் தனித்து மறைப்பணி சீடர்களாய் இருப்பது இயலாதது என்பதை, Vavy Elyssa தன் பகிர்வில் வெளிப்படுத்தினார். மடகாஸ்கர் இளையோரே, இயேசு உங்களிடம் ஒரு பணியை ஒப்படைத்துள்ளார். அவர் உங்களைத் தம் பணிக்கு அனுப்புகையில் தனியே அனுப்புவதில்லை. நாம் எல்லாரும் ஒரே குடும்பம். மரியா நம் அன்னை. அவரைப்போல் “ஆகட்டும்” என்று சொல்வோம். தம் பிள்ளைகளின் வாழ்வுப் பாதையில் அவர்களைக் கவனித்து வருபவர் மரியா. நம்பிக்கையின் ஒளி அணைந்துவிடக் கூடாது. மடகாஸ்கருக்கு நாம் விரும்புவதும் இதுவே. நீங்களும், உங்கள் நண்பர்களும், நம்பிக்கையின் ஒளி அணைந்துவிடாதபடி கவனமாக இருங்கள். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்.

இவ்வாறு மடகாஸ்கர் இளையோரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

08 September 2019, 10:23