தேடுதல்

Vatican News
மடகாஸ்கர் ஞாயிறு திருப்பலியில்(080919) கலந்துகொள்ள வந்த விசுவாசிகள் கூட்டத்தின் ஒரு பகுதி மடகாஸ்கர் ஞாயிறு திருப்பலியில்(080919) கலந்துகொள்ள வந்த விசுவாசிகள் கூட்டத்தின் ஒரு பகுதி  (AFP or licensors)

மடகாஸ்கரில் திருப்பலி-ஆண்டவரின் திட்டங்களை நம் சொந்தமாக்குவோம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தானனரிவோவிலுள்ள, Soamandrakizay மறைமாவட்ட மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர் (லூக்.14,25) என்று இத்திருப்பலியில் வாசிக்கக் கேட்டோம். இந்தப் பெருந்திரள் போன்று, நீங்களும் பெருமெண்ணிக்கையில், அவரின் நற்செய்தியைப் பெற்று அவரின் அடிச்சுவடுகளில் பின்செல்ல வந்திருக்கிறீர்கள். ஆயினும், இயேசுவைப் பின்செல்வது எளிதல்ல. அதற்கு எவ்வளவு அர்ப்பணம் தேவை என்பதை லூக்கா நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகின்றது.

குடும்ப உறவுகள்

இயேசு நமக்கு முன்வைக்கும் முதல் சவால், குடும்ப உறவுகள் பற்றியது. இறையாட்சியில் நுழைவது, இரத்த உறவுகள் அல்லது, ஒரு குறிப்பிட்ட குழுவில் உறுப்பினராக இருப்பதோடு மட்டும் கட்டுப்படுத்தப்படலாம் அல்லது, குறைக்கப்படலாம் என நினைப்பவர்களுக்கு, நம் ஆண்டவர் முன்வைக்கும் புதிய வாழ்வு இடையூறாக இருக்கும். இதையும் கடந்து நம் பார்வை செல்லவேண்டுமென ஆண்டவர் கேட்கிறார். குடும்பம், கலாச்சாரம் அல்லது சமுதாயப் பின்புலத்தைக் கடந்து, அனைவரையும் சகோதரர், சகோதரிகளாக நோக்க இயலாதவர்கள், என் சீடர்களாக இருக்க இயலாது என்று இயேசு சொல்கிறார். அவரின் அன்பு, எல்லாருக்கும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது மற்றும், அது எல்லாருக்குமானது.

இயேசுவைப் பின்செல்வதிலுள்ள சிரமம்

இயேசு நமக்கு முன்வைக்கும் இரண்டாவது சவால் என்னவெனில், இறையாட்சியை நம் சொந்த கருத்தியல்களோடு இணைத்துப் பார்க்கத் தேடினால் அவரைப் பின்செல்வது கடினம் என்பதாகும். வன்முறை, பிரிவினை, கொலை, நாடுகடத்தல், பயங்கரவாதம், ஓரங்கட்டுதல் போன்ற செயல்களை நியாயப்படுத்த, கடவுளை அல்லது மதத்தின் பெயரை பயன்படுத்தும் கருத்தியல், இயேசுவைப் பின்செல்வதற்கு கடினமாக அமையும். மாறாக, இயேசுவைப் பின்செல்வது, உரையாடலையும், ஒருவர் ஒருவருடன் ஒத்துழைப்பையும் பாதையாக செயல்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

இறுதியாக, நம்மையே நாம் தொடர்ந்து நியாயப்படுத்தும்போது, ஆண்டவர் நமக்கு வழங்கும் புதிய வாழ்வைப் பகிர்ந்துகொள்வது கடினமாகிறது. ஏனெனில், எல்லாமே நம் முயற்சிகளையும், வளங்களையுமே சார்ந்திருக்கின்றன என்று நாம் நினைக்கின்றோம். இந்த மூன்று சவால்களோடு, இறையாட்சியின் வருகைக்கு, தம் சீடர்கள் தயார் செய்ய வேண்டுமென ஆண்டவர் விரும்புகிறார்.

வாழ்வின் மையம் கடவுள்

கடவுளுக்கு இடமளிப்பது, நம் வாழ்வின் மையமாகவும், அச்சாணியாகவும் அமைய வேண்டும். நம்மைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், இளையோரும், சிறாருமென, ஏராளமானோர் துன்புறுவதையும், தேவையில் இருப்பதையும் காண்கிறோம். இந்நிலை, கடவுளின் திட்டத்தின் ஒரு பகுதி அல்ல. தன்னலம், தனிமனிதக்கோட்பாடு, மற்றும் பெருமைக்கு நாம் மடிய வேண்டுமென, இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இதன் வழியாக, உடன்பிறப்பு உணர்வு வெற்றியடைய நம்மால் அனுமதிக்க இயலும். அதிகாரம், பதவி, பணம் மற்றும், மனித மகிமையில் பாதுகாப்பைத் தேடும் அனைத்துவிதமான சிலைவழிபாடுகளை நாம் ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டும். இந்த அழகான நாடு, நற்செய்தி, நம் வாழ்வாக மாறும் இடமாக உருவாவதற்கு, இயேசு முன்வைக்கும் சவால்கள், நம்மைத் தூண்டுகின்றன. அத்தகைய இடத்தில், வாழ்வு, கடவுளின் மேலான மகிமையாக அமையும்.

இவ்வாறு, திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

08 September 2019, 10:39