தேடுதல்

Vatican News
அத் லிமினாவில் இந்திய ஆயர்கள் அத் லிமினாவில் இந்திய ஆயர்கள்  (Vatican Media)

அத் லிமினாவில் 54 இந்திய ஆயர்கள் சந்திப்பு

தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும், புதுச்சேரி யூனியன் பகுதியில் இறையாட்சிப் பணியாற்றும், இலத்தீன் வழிபாட்டுமுறையின் 54 ஆயர்கள், திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஆயர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்தித்து, தங்கள் மறைமாவட்டங்களின் நிலவரம் பற்றி அறிவிக்கும் அத் லிமினா நிகழ்வையொட்டி, செப்டம்பர் 17, இச்செவ்வாய் காலை 10.30 மணியளவில், இந்தியாவின் 54 ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும், புதுச்சேரி யூனியன் பகுதியில், இறையாட்சிப் பணியாற்றுகின்ற, இலத்தீன் வழிபாட்டுமுறையின் 54 ஆயர்கள், இச்செவ்வாயன்று திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்தனர்.

தமிழகத்தின் 17 ஆயர்கள் உட்பட, திருத்தந்தையைச் சந்தித்த 54 ஆயர்களும், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை-மயிலாப்பூர், மதுரை, பாண்டிச்சேரி-கடலூர், திருவனந்தபுரம், வெராப்போலி திருஆட்சிப்பீடங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், மூன்று குழுக்களாக, திருத்தந்தையைச் சந்திக்கின்றனர். முதல் குழுவைச் சேர்ந்த, பீஹார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும், அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியைச் சேர்ந்த 38 ஆயர்கள், கடந்த வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இரண்டாவது குழு, இச்செவ்வாயன்று திருத்தந்தையைச் சந்தித்துள்ளது. மூன்றாவது குழு, செப்டம்பர் 26ம் தேதியும், சீரோ-மலபார் வழிபாட்டுமுறை ஆயர்கள் அக்டோபர் 3ம் தேதியும், இம்மாதத்தில், சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களும், திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

C9 கர்தினால்கள் அவை

மேலும், திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு உதவும் C9 கர்தினால்கள் அவையின் 31வது கூட்டம், செப்டம்பர் 17, இச்செவ்வாயன்று, திருத்தந்தையின் தலைமையில் தொடங்கியது. இது செப்டம்பர் 19ம் தேதி நிறைவடையும்.

இந்த அவையின் முதல் கூட்டம், 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையிலும், கடைசி கூட்டம், இவ்வாண்டு ஜூன் மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் நடைபெற்றன.

17 September 2019, 15:41