தேடுதல்

Vatican News
அருளாளர் ஜாக் லவல் திருத்தலத்தில் திருத்தந்தை அருளாளர் ஜாக் லவல் திருத்தலத்தில் திருத்தந்தை  (Vatican Media)

அருளாளர் ஜாக் லவல் திருத்தலத்தில் திருத்தந்தை

பிரெஞ்ச் நாட்டவரான அருளாளர் லவல் அவர்கள், சோர்வின்றி அயராது கழுதையில் பயணம் செய்து, ஏழைகளின் உடையில், ஏழைக் குடிசைகள் மற்றும் சேரிகளில் நற்செய்தியை அறிவித்தவர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு, போர்ட் லூயிஸ் நகரிலுள்ள அருளாளர் லவல் திருத்தலம் சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பிரான்ஸ் நாட்டில் மருத்துவப் பணியாற்றிய அருளாளர் லவல் அவர்கள், 1841ம் ஆண்டில் மொரீஷியஸ் நாட்டிற்கு வந்து, உடனடியாக, உள்ளூர் மொழியான Creoleலைக் கற்றார். அந்நாட்டில் இம்மொழியைப் பேசுகிறவர்கள்,  84 விழுக்காடு. போஜ்புரி பேசுகிறவர்கள் 5.3 விழுக்காடு. பிரெஞ்ச் பேசுகிறவர்கள் 3.6 விழுக்காடு. ஏனைய மொழிகளைப் பேசுகிறவர்கள் 7.1 விழுக்காடு. அருளாளர் லவல் அந்நாடு வந்த சமயத்தில்தான் பிரித்தானிய அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்த அடிமைகளுக்கு நற்செய்தியை அறிவித்தார். சோர்வின்றி அயராது கழுதையில் பயணம் செய்து, ஏழைகளின் உடையில், ஏழைக் குடிசைகள் மற்றும் சேரிகளில் நற்செய்தியை அறிவித்தார். தூயஆவியார் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளராகிய லவல் அவர்கள், நற்செய்திப்பணியிலும், வேளாண்மை மற்றும், நலவாழ்வை முன்னேற்றுவதிலும் தன் வாழ்நாளைச் செலவிட்டார். இவரின் விழாவை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 9ம் தேதி, அந்நாட்டு மக்கள், எவ்வித மத, இன வேறுபாடின்றி சிறப்பிக்கின்றனர். இவ்வாண்டு திருத்தந்தையின் பயணத்தை முன்னிட்டு, இவ்விழாவை, செப்டம்பர், 7,8 ஆகிய தேதிகளில் சிறப்பித்துள்ளனர். 1864ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த இவரை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1979ம் ஆண்டில் அருளாளராக அறிவித்தார். இவர் மொரீஷியஸ்க்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணம் இடம்பெறுகின்றது.

09 September 2019, 16:10