தேடுதல்

Vatican News
மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 180919 மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 180919  (Vatican Media)

மறைக்கல்வியுரை : தீர்ப்பை அவசரப்பட்டு வழங்க வேண்டாம்

பகுத்து ஆய்வு செய்தல் என்பது ஒரு கலை. அங்கு, ஏற்கனவே வரையறுத்து வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் என்று எதுவும் இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

துவக்கக் காலத்தில் கிறிஸ்தவம் எத்தகைய இடர்பாடுகளைச் சந்தித்து வளர்ந்தது என்பதை எடுத்துரைக்கும் விதமாக, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த ஒரு தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் சீடர்கள் எத்தகைய மன உறுதியுடன் செயல்பட்டனர் என்பது குறித்து புதன் மறைக்கல்வி உரையில் எடுத்துரைத்தார். முதலில் திருத்தூதர் பணி நூல் பிரிவு ஐந்திலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். . […] அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். […]  இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால், அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர் (தி.ப. 5, 34-35.38-39). அதன்பின் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

அன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, தூய பேதுருவும் ஏனைய சீடர்களும், நற்செய்தி பரவலைத் தடுக்க முனைந்தவர்கள் முன்பு எவ்வளவு துணிச்சலுடன் செயல்பட்டனர் என்பது குறித்து நோக்குவோம்

பெந்தக்கோஸ்து அனுபவத்திலிருந்து பலம்பெற்ற சீடர்கள், யாராலும் தடுத்து நிறுத்த முடியாத இறைவனின் மீட்பளிக்கும் வார்த்தைகளின் ஒலிபெருக்கிகளாக மாறினர். சீடர்களின் நற்செய்தி அறிவிப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய யூதத் தலைமைச் சங்கத்தின் நடுவே, சீடர்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது, அங்கு ஒரு வித்தியாசமான குரலை நாம் கேட்கிறோம். அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர் கமாலியேல், சரியான முறையில் தீர்ப்பளிக்கும் கலையை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். இறைவாக்குரைக்கும் ஞானத்தால் நிரப்பப்பட்டவராக அவர், தீர்ப்பை அவசரப்பட்டு வழங்க வேண்டாம், மாறாக, குற்றத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த, காலத்தின் கைகளில் ஒப்படைப்போம் என காத்திருக்கச் சொல்கிறார்.  இத்தகைய,  சரியான முறையில் ஆய்வுசெய்யும் தகுதி, திருஅவைக்கு முக்கியமானது. இந்நிலையானது, நாம் தொலைநோக்குப் பார்வையுடையவர்களாக, வாழ்வு நிகழ்வுகளைக் குறித்து ஆழமாக ஆராயவும், அவசரத் தீர்வுகளை வழங்காதிருக்கவும் அழைப்பு விடுக்கிறது. பகுத்து ஆய்வு செய்தல் என்பது ஒரு கலை. அங்கு, ஏற்கனவே வரையறுத்து வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் என்று எதுவும் இல்லை. வரலாற்றில் இறைத்தந்தையின் பிரசன்னம் விட்டுசென்ற அடையாளங்களை கண்டுகொண்டு கற்பதற்கு, இறைமக்களின் ஆன்மீக அறிவுத்திறனே இந்த பகுப்பாய்வு கலை என்பது. காலமும், நம் சகோதர சகோதரிகளின் முகமும், வாழும் கடவுளின் தூதுவர்கள் என்பதை கற்றுக்கொள்ள நமக்கு உதவும் பகுப்பாய்வுப் பண்பை நாம் பெற்றுக்கொள்ள, தூய ஆவியாரின் உதவியை வேண்டுவோம்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   இம்மாதம் 21ம் தேதி, அதாவது, வரும் சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் Alzheimer எனும் மறதி நோய் விழிப்புணர்வு தினத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அந்நோயால் துன்புறும் மக்களுக்காகச் செபிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தினார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

18 September 2019, 16:10