தேடுதல்

Port Louis விமானத்தளத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு Port Louis விமானத்தளத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு 

மொரீஷியஸ் தலைநகரில் திருத்தந்தைக்கு வரவேற்பு

மொரீஷியஸ் நாட்டில் பூர்வீக மக்கள் என்பவர்களே கிடையாது. 16ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் இத்தீவிற்கு முதன்முதலில் சென்று காலனியை அமைத்தபோது, அங்கு மனிதர்களை அல்ல, dodo என்ற பறவையையே பார்த்துள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

9-9-2019 என்ற சிறப்பு எண்களைக் கொண்ட இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றும், ஓர் அழகிய மற்றும், அமைதியான நாடு மொரீஷியஸ். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த சிறிய தீவு நாட்டைப் பார்வையிட்ட அமெரிக்க எழுத்தாளர் மாற்க் டுவைன் அவர்கள், “மொரீஷியஸ் முதலில் அமைக்கப்பட்டது, பிறகு விண்ணகம். மேலும், விண்ணகம், மொரீஷியசிற்குப் பிறகு நகல் எடுக்கப்பட்டது” என எழுதியுள்ளார். இந்த வரிகள், மிகைப்பட தோன்றினாலும், இந்நாட்டின் இயற்கை வனப்பே, இவ்வாறு எழுத வைத்துள்ளது என்று சொல்லலாம். "இந்தியப் பெருங்கடலின் விண்மீன் மற்றும், திறவுகோல் (Stella Clavisque Maris Indici)"  என்பதுதான் மொரீஷியசின் விருதுவாக்கும்கூட. இது இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகளில் எல்லாரும் கலந்துகொண்டு அவரைப் பார்ப்பதற்கு வசதியாக, இன்று விடுமுறையையும் அறிவித்துள்ளது அரசு.

போர்ட் லூயிஸ் விமானநிலையத்தில் வரவேற்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் ஆறாவது நாளாகிய இத்திங்கள், உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, மடகாஸ்கர் தலைநகர் Antananarivoவிலிருந்து, மடகாஸ்கர் விமானத்தில், மொரீஷியஸ் நாட்டுத் தலைநகர் போர்ட் லூயிசுக்குப் புறப்பட்டார். ஏறத்தாழ 2 மணி நேரம் பயணம் செய்து, உள்ளூர் நேரம் காலை 8.23 மணிக்கு போர்ட் லூயிஸ் நகர் விமானநிலையம் சென்றடைந்த திருத்தந்தையை, மொரீஷியஸ் நாட்டுப் பிரதமர் பிரவிந்த் குமார் சுகுநாத் (Pravind Kumar Jugnauth) அவர்கள், தனது துணைவியாருடன் வரவேற்றார். போர்ட் லூயிஸ் ஆயர், கர்தினால் மௌரிஸ் பியட் அவர்கள், ஆயர்கள், அரசு அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ 270 பேர் அங்கு இருந்தனர். மழை, மற்றும், பலத்த காற்று வீசினாலும், திருத்தந்தைக்கு, அமோக அரசு மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு சிறார் மலர்கள் கொடுத்தனர். இந்நிகழ்வுக்குப் பின், அங்கிருந்து, 43.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசியாம் அன்னை மரியா நினைவிடத்திற்குச் சென்றார், திருத்தந்தை. அவர் காரில் சென்ற சாலையெங்கும், பெரிய கம்பங்களில், பெரிய வத்திக்கான் கொடிகளும், பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களைக்கண்ட மொரீஷ்யஸ் கொடிகளும் பறந்து கொண்டிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2019, 15:56