தேடுதல்

Vatican News
ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் 150919. ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் 150919.  (ANSA)

தீமைகளை வெற்றி கொள்ள இறை உதவி தேவை

இயேசு, பாவிகளை வரவேற்று அவர்களுக்கு தன்னையே உணவாகத் தரும் நிகழ்வைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியிலும் காண்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

நாம் நல்லவர்கள் அது போதும், என்று நம்பியிராமல், தீமைகளை வெற்றிகொள்ள கடவுளின் உதவி இன்றியமையாதது என்பதை உணர்ந்தவர்களாக, நாம் செயல்படுவோம் என்ற கருத்தை மையமாக வைத்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பயணிகள் குழுமியிருக்க, அவர்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளை வெற்றி கொள்ள இறை உதவி தேவை, நம்மை தன் அன்பால் மீட்கும் இறைவனும், தன்னை நம்மிடம் திணிப்பதில்லை, நல்வழிகளை நமக்கு பரிந்துரைக்க மட்டுமே செய்கிறார் என்று கூறினார்.

இயேசு, பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்தியதைக் குறித்து பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் குறை கூறுதலுடன் துவங்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றி தன் மூவேளை செப உரையைத் துவக்கிய திருத்தந்தை, இயேசு, பாவிகளை வரவேற்று அவர்களுக்கு தன்னையே உணவாகத் தரும் நிகழ்வைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியிலும் காண்கிறோம் என்றார்.

'இயேசு, பாவிகளை வரவேற்கிறார், தன் உணவு மேசைக்கு உங்களை அழைக்கிறார்’ என்ற வாசகத்தை நம் ஒவ்வொரு கோவிலின் வாசலிலும் நாம் எழுத முடியும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஞாயிறு நற்செய்தி கூறும், காணாமல் போன ஆடு, நாணயம், மற்றும், மகன் என்ற மூன்று உவமைகள் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்பை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என அவர் நமக்காக தினந்தோறும் காத்திருக்கிறார், ஏனெனில், அவர் ஒரு கடுமையான தந்தை அல்ல, மாறாக, இரக்கம் நிறைந்தவர் என எடுத்துரைத்தார்.

இறைவன் தீமைகளை வெல்வது, வல்லமையால் அல்ல, மாறாக, மன்னிப்பின் உதவியுடன் என்பதை நமக்குக் கற்றுத்தருவதுடன், அவர் நம்மீது எதையும் திணிப்பதில்லை, மாறாக, நல்லவைகளை பரிந்துரைக்கவேச் செய்கிறார் என்பதையும் எடுத்துரைத்தார்.

தீமைகளை வென்றிட நாம் முதலில் இறைவனின் மன்னிப்பை ஏற்கவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருள்சாதனத்தில் நாம் இறைவனின் அன்பை சந்தித்து அவரின் மன்னிப்பைப் பெற்று, புதியவராக மாற்றம் பெறுகிறோம். ஆகவே, நம்மை மட்டுமே நம்பியிராமல், நமக்காக காத்திருக்கும் இறைவனை நாடி நாம் செல்ல வேண்டிய தேவையை உணர்ந்து நாம் செயல்படவேண்டும் என மேலும் கூறினார்.

15 September 2019, 12:48