தேடுதல்

Vatican News
Akamasoa நட்பு கிராமத்தில் திருத்தந்தை Akamasoa நட்பு கிராமத்தில் திருத்தந்தை 

Akamasoa நட்பு கிராமத்தில் திருத்தந்தை

Mahatzana பகுதியில், Akamasoa மற்றும், மடகாஸ்கர் நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

Soamandrakizay மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அங்கிருந்து 2.8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மாலை 2.50 மணியளவில், அவ்விடத்திலிருந்து, 8.1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Akamasoa  நட்பு கிராமத்திற்குச் சென்றார் திருத்தந்தை. இக்கிராமம், 1989ம் ஆண்டில், அர்ஜென்டீனா நாட்டு அருள்பணியாளர் Pedro Opeka அவர்களால் உருவாக்கப்பட்டது. மறைப்பணி சபையைச் சேர்ந்த இவர், 1970ம் ஆண்டில், மடகாஸ்கர் நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்றவர். Antananarivo நகரின் தெருக்களிலும், நகருக்கு வெளியே பத்து கிலோ மீட்டர் தூரத்தில் Andralanitra குப்பை மேட்டிலும் வாழ்ந்துவந்த ஏழைகள் மாண்புடன் வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில், இவர் இந்த நட்பு கிராம மையத்தைத் துவங்கினார். இந்த அமைப்பால், அவ்விடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் பலனடைகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் முப்பதாயிரம் ஏழைகள் உதவி பெறுவதற்காக இங்கு வருகின்றனர். மேலும், 14 ஆயிரம் சிறார், இந்த அமைப்பின் வழியாக கல்வி பெறுகின்றனர். பள்ளிகள், பணித்தளங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை அமைப்பதற்கு, ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவற்றைக்கொண்டு, அவர்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பி, பிள்ளைகளின் வருங்காலத்தையும் தயார் செய்கின்றனர்.

Akamasoa நட்பு கிராம அரங்கத்தில் திருத்தந்தையைச் சந்திப்பதற்காக, ஏறத்தாழ எட்டாயிரம் இளையோர் அமர்ந்திருந்தனர். பாடலுடன் துவங்கிய இந்நிகழ்வில் முதலில் சிறுவன் ஒருவன், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினான். பின்னர், திருத்தந்தை சிறிய உரையாற்றினார். திருத்தந்தையின் உரையின் முடிவில், இளையோர் திருத்தந்தையைச் சூழ்ந்து நின்று ஆடிக்கொண்டே பாடினர். இந்நிகழ்வில், மடகாஸ்கர் நாட்டு அரசுத்தலைவர் Andry Nirina Rajoelina, அவரது துணைவியார் Mialy Rajoelina née ஆகியோரும் கலந்துகொண்டனர். மூன்று சிறார், பரிசுப்பொருள்களை திருத்தந்தைக்கு வழங்கினர்.

Mahatzana பகுதியில் திருத்தந்தை

இந்நிகழ்வுக்குப் பின்னர், அவ்விடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவிலிருக்கும் Mahatzana பகுதியில், தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை. இப்பகுதியும், Akamasoa நட்பு கிராமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அச்சந்திப்பில், Akamasoa மற்றும், மடகாஸ்கர் நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித மிக்கேல் கல்லூரி சென்று, அருள்பணியாளர், இருபால் துறவியர் மற்றும், குருத்துவ பயிற்சி மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். இதுவே, இஞ்ஞாயிறன்று நடைபெற்ற இறுதி நிகழ்வாகும். செப்டம்பர் 09, இத்திங்கள் காலையில், Antananarivoவிலிருந்து மொரீஷியஸ் நாட்டிற்குச் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, இத்திங்கள் இரவு மீண்டும் Antananarivo செல்வார். செப்டம்பர் 10, இச்செவ்வாய் காலையில் அந்நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று இரவு 7 மணியளவில் உரோம் வந்துசேர்வார். இத்துடன், ஒரு வாரம் கொண்ட அவரின் 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் முற்றுப்பெறும்.

08 September 2019, 13:44