தேடுதல்

காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

சிறியோரின் பாதுகாப்பு குறித்து திருத்தந்தையின் செய்தி

சிறியோரின் உள்ளங்களைச் சிதைக்கும் பல்வேறு விடயங்களைத் தெளிவாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து சிறியோரை பாதுகாப்பது திருஅவைக்கு முன்னிருக்கும் முக்கிய கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘நலனைப் பேணுங்கள்’ என்று சொல்லும்போது, அது, சிறியோர் மீது நாம் கொள்ளும் பரிவையும், மென்மையான உள்ளத்தையும் வெளிப்படுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டுக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

நலனைப் பேணும் அறக்கட்டளையும், சிறியோர் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள CUIDA என்ற மையமும், சிலே நாட்டின் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டுள்ள ஒரு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

சிலே நாட்டின் சந்தியாகோ உயர் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியும், கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் தற்காலிக வேந்தருமான ஆயர் Celestino Aós அவர்களுக்கு, இக்காணொளிச் செய்தியை, திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

சிறியோர் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துவது மட்டும் போதாது, அத்தகைய தவறுகள் எதனால் நிகழ்கின்றன என்பதை ஆய்வு செய்யவும், தகுந்த பாதுக்காப்பு வழிகளை நிலைநாட்டவும், இத்தகைய கருத்தரங்குகள், பெரும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறியோரின் உள்ளங்களைச் சிதைக்கும் பல்வேறு விடயங்களைத் தெளிவாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து சிறியோரை பாதுகாப்பது திருஅவைக்கு முன்னிருக்கும் முக்கிய கடமை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2019, 14:10