மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீசியஸ் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீசியஸ் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் 

ஆப்ரிக்க திருத்தூதுப்பயணத்தில் புதிய நிகழ்வு இணைப்பு

ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த இரண்டாவது திருத்தூதுப் பயணம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் – இயேசு சபை மாநில தலைவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீசியஸ் நாடுகளுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் பற்றிய முழு விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

இப்பயணத்தில், பல்வேறு இடங்களில் திருப்பலிகள் நிறைவேற்றும் திருத்தந்தை, பல்சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆயர்கள், குருகுலத்தார், இளையோர் போன்றோரையும் சந்திப்பார்.

இப்பயண விவரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும், இத்திங்களன்று திருப்பீட தகவல் தொடர்பகம் வெளியிட்ட புதிய அறிவிப்பில், செப்டம்பர் 5ம் தேதி, மப்புத்தோ நகரில், மத்தேயு இல்லத்தை திருத்தந்தை பார்வையிடுவது, பயணத் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

மொசாம்பிக்கில், உணவு, உறைவிடமின்றி துன்புறும் இளையோர் மற்றும், சிறார்க்கென, இருபதுக்கும் அதிகமான துறவு சபைகளின் முயற்சியால் இந்த இல்லம் நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த இரண்டாவது திருத்தூதுப் பயணம் பற்றி கருத்து தெரிவித்த, ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் இயேசு சபை மாநிலத் தலைவர், அருள்பணி Agbonkhianmeghe Orobator அவர்கள், திருத்தந்தையின் முந்தைய முப்பது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களைவிட, இப்பயணம், மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மொசாம்பிக் நாட்டில், புரட்சி இயக்கங்களுடன் ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், மிகவும் பலவீனமாக உள்ளதுபோல் தெரிகின்றது, மடகாஸ்கர் நாட்டில், 2009ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர், அந்நாட்டு அரசு, தற்போது அரசமைப்புப்படி ஆட்சி நடத்தத் தொடங்கியுள்ளது மற்றும், மொரீசியஸ் நாட்டில், நிதிசார்ந்த முறைகேடு தொடர்பாக, கடந்த ஆண்டில் அரசுத்தலைவர் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.      

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2019, 14:43