தேடுதல்

Vatican News
250819 ஞாயிறு மூவேளை செப உரையின்போது கூடியிருந்த மக்கள் 250819 ஞாயிறு மூவேளை செப உரையின்போது கூடியிருந்த மக்கள்  (Vatican Media)

நம் உடன்வாழ் மனிதர்களுக்கு நன்மை செய்ய அழைப்பு

நல்லதொரு வாழ்வை, நற்செயல்களாக மாற்றி, இறைவனையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோரே இறைவனால் அங்கீகரிக்கப்பட உள்ளவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் வான் வீட்டிற்கு செல்வதற்கு சரியான ஒரு பாதை உள்ளது, அது எல்லாருக்கும் திறந்ததாக உள்ளது, ஆனால் அது குறுகிய வாயிலைக் கொண்டுள்ளது என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர் மீட்படைய வேண்டுமெனில் அவர் கடவுளையும் தமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர வேண்டியது அவசியம், ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என, வத்திக்கான் புனித பேதுரு பேராலய வாளகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளிடம் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மீட்புப் பெறுபவர்கள் சிலர் மட்டும்தானா' என கேட்கப்பட்ட கேள்வியையும், இயேசு அதற்கு அளித்த பதிலையும் பற்றி விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து மூவேளை செப உரை வழங்கினார்.

நல்லதொரு வாழ்வை வாழ்ந்து, அந்த வாழ்வை நற்செயல்களாக மாற்றி, இறைவனையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்பவர்களே, இறைவனால் அங்கீகரிக்கப்பட உள்ளவர்கள் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிவுடன் கூடிய வாழ்வைக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றார்.

இறைவனுடன் உண்மையான ஒன்றிப்பைக் கொண்டிருக்கவும், செபிக்கவும், கோவிலுக்குச் செல்லவும், அருளடையாளங்களை நாடிச்செல்லவும், இறைவார்த்தையால் ஊட்டம் பெறவும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளார்கள் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தகைய செயல்கள் வழியாக நாம் விசுவாசத்தை கெட்டியாக பிடிக்கவும், நம்பிக்கையில் பலம்பெறவும், பிறரன்பு நம்மில் மீண்டும் பிறப்பெடுக்கவும் உதவி பெறுகிறோம் என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் உடன்வாழ் மனிதர்களுக்கு நன்மை செய்யவும், தீமை மற்றும் அநீதிகளுக்கு எதிராக இறையருளின் உதவியுடன் போராடவும், நாம் அழைப்புப் பெற்றுள்ளோம், என மேலும் கூறினார்.

25 August 2019, 13:00