தேடுதல்

ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் -110819 ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் -110819 

விசுவாச வாழ்வு என்பது ஒரு தொடர்பயணம்

நம் செபத்தின் வழியாக, இயேசுவுடன் கொள்ளும் உறவால், நம் கரங்களில் ஏந்தியுள்ள விளக்குகள் மீண்டும் மீண்டும் ஒளிர்வதற்குத் தேவையான எண்ணெயைப் பெறுகின்றன – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் வாழ்ந்து செயலாற்றும் அதே வேளையில், நம் இதயங்கள் வானகம் குறித்த ஏக்கம் கொண்டவைகளாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தியில் கூறப்பட்ட, ‘விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்' உவமை குறித்த கருத்துக்களைப் பகிர்ந்தபோது,  நம் வாழ்வில் இறைவனின் வழியை பற்றிக் கொள்ள எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாம் எப்போதும் நம் இடைக்கச்சையை இறுகக் கட்டியவர்களாக எந்நேரத்திலும் பயணத்தைத் துவக்குவதற்கு தயாராக இருப்பவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, சுகம் நிறைந்த இடத்தில் உறைவதைக் கைவிட்டு,  இறைவன் காட்டும் வழியில் செல்லவேண்டியதை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என்றார்.

விசுவாச வாழ்வு என்பது, தேங்கிப்போன ஒன்றல்ல, மாறாக, அது ஒரு தொடர்பயணம் என்பதை, இறைவனில் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொருவரும் அறிவர் என்பதையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவிருப்பத்திற்கிணங்கி பயணம் மேற்கொள்ள எப்போதும் தயாராக இருப்பது முதல் நிலை என்றால், இரண்டாவது நிலை என்பது, விளக்குகளை எப்போதும் பிரகாசமாக வைத்திருப்பதாகும் என தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் செபத்தின் வழியாக இயேசுவுடன் கொள்ளும் உறவால் இந்த விளக்குகள் மீண்டும் மீண்டும் ஒளிர்வதற்குத் தேவையான எண்ணெயைப் பெறுகின்றன என உரைத்தார்.

மறுவுலக வாழ்வு நோக்கிய நம் பயணத்தில் நம் அனைத்துத் திறமைகளும் பலன்தரும் வகையில் நாம் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விழிப்புடன் இருக்கும் ஒவ்வொரு பணியாளரும் வீட்டு உரிமையாளரால் பணிவிடைச் செய்யப்படுவதை இன்றைய வாசகத்தில் காணும் நாம், இறைவனும் இதையே பின்பற்றுவதைக் காணும் பேறைப் பெறுவோம் என உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2019, 15:35