ஜெனோவா பாலம் உடைவதற்கு முன்னும் பின்னும் ஜெனோவா பாலம் உடைவதற்கு முன்னும் பின்னும் 

ஜெனோவா மக்களிடம் திருத்தந்தை: நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்

ஜெனோவா மக்கள், ஒருமைப்பாட்டுணர்வை பெரிய அளவில் வெளிப்படுத்தும் திறனுடையவர்கள், உங்களின் நம்பிக்கையை எவரும் திருடிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜெனோவா மக்களை, தான் ஒருபோதும் மறப்பதில்லை, மொராந்தி பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும், ஏனைய வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மறவாமல் செபிக்கின்றேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

வட இத்தாலியிலுள்ள ஜெனோவா துறைமுக நகரின் மொராந்தி பாலம் திடீரென இடிந்து விழுந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவு, ஆகஸ்ட் 14, இப்புதனன்று நினைவுகூரப்படுகின்றது.  இதையொட்டி, ஜெனோவா நகரில் பிரசுரமாகும், "19ம் நூற்றாண்டு (Il Secolo XIX)" என்ற தினத்தாளுக்கு, அனுப்பிய செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இத்தகைய துயர நிகழ்வுகளுக்குமுன், ஆறுதல் சொல்வதற்கு, மனித வார்த்தைகள் போதுமானவையாக இல்லை என்றும், ஜெனோவாவை நினைக்கும்போதெல்லாம், அந்நகரின் துறைமுகத்தை நினைக்கின்றேன், எனது தந்தை புறப்பட்ட இடம், அந்நகர மக்களின் அன்றாட கடின உழைப்பு, நம்பிக்கைகள் போன்ற எல்லாவற்றையும் எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நமக்குமுன், கடுந்துன்பங்களை அனுபவித்து, அவமானப்படுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, கொடூரமாய்க் கொல்லப்பட்ட இயேசு மீது கண்களைப் பதிய வையுங்கள் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உங்கள் கேள்விகள், வேதனைகள், கோபங்கள் ஆகிய அனைத்துடனும், இயேசுவை உற்று நோக்குங்கள் எனவும், ஜெனோவா மக்களிடம் கூறியுள்ளார்.

இரக்கமுள்ள இறைத்தந்தை எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவை, எப்போதும் உங்களுடன் நெருங்கிய உறவில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெனோவா நகரின் குடும்பங்களையும், நகரையும் அதிகம் பாதித்த இந்த மாபெரும் துயர நிகழ்வுக்குப்பின், அந்நகர மக்கள் மீண்டெழுந்து முன்னோக்கிப் பயணித்ததைப் ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து தோள்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, மொராந்தி பாலம் திடீரென இடிந்ததில், 43 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 14:44