தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை - அடிமைத்தனத்தை ஒழிப்போம்

உலகில் அடிமைமுறை சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும், மனித வர்த்தகம் இன்றும் உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது. 2013ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 மில்லியன் முதல், 40 மில்லியன் வரையிலான மக்கள், இதில் சிக்கியுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“நாம் எல்லாரும், கடவுளின் சாயலாகவும், பாவனையாகவும் படைக்கப்பட்டுள்ளோம், மற்றும், ஒரே மாண்பைக் கொண்டுள்ளோம். எனவே, அடிமைத்தனத்தை ஒழிப்போம்” என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 23, இவ்வெள்ளியன்று, ஹாஸ்டாக் (#IDRSTA) குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 23, இவ்வெள்ளியன்று, அடிமை வர்த்தகம் மற்றும், அதன் ஒழிப்பை நினைவுகூர்ந்த உலக நாள் நினைவுகூரப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியில், உலகில் எல்லாவிதமான அடிமைமுறைகள் ஒழிக்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அட்லாண்டிக் அடிமை வர்த்தகம்

இப்போதைய ஹெய்ட்டி மற்றும், தொமினிக்கன் குடியரசாகிய, அப்போதைய சாந்தோ தொமிங்கோவில், 1791ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதிக்கும், ஆகஸ்ட் 23ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் எழுந்த மாபெரும் கிளர்ச்சியே, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடைபெற்ற அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட வழியமைத்தது.

ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும், கரீபியன் நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட அடிமை வியாபாரங்களுக்குப் பலியானோர், மற்றும், பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து, இத்தகைய அடிமைமுறை உலகில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த, ஐ.நா. நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி, அடிமை வர்த்தகம் மற்றும், அதன் ஒழிப்பை நினைவுகூரும் உலக நாளை கடைப்பிடித்து வருகின்றது.

ஆகஸ்ட் 23, இவ்வெள்ளியன்று, இந்த உலக நாளின் 25வது ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும், Jamestownக்கு ஆப்ரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட 400ம் ஆண்டு நிறைவும், 2019ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது

16ம் நூற்றாண்டு முதல், 19ம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டத்தில், 400 ஆண்டுகளுக்கு மேலாக, ஏறத்தாழ 1 கோடியே 20 இலட்சம் முதல், 1 கோடியே 28 இலட்சம் வரையிலான ஆப்ரிக்க மக்கள், அட்லாண்டிக் பெருங்கடல் வழியே, அடிமைகளாக, வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர்

23 August 2019, 12:58