தேடுதல்

Ressano Garcia விண்ணேற்பு திருத்தலத்திற்கு திருப்பயணம் Ressano Garcia விண்ணேற்பு திருத்தலத்திற்கு திருப்பயணம் 

மொசாம்பிக் திருத்தூதுப் பயணத்திற்காக இறைவேண்டல்கள்

திருத்தந்தையின் மொசாம்பிக் திருத்தூதுப் பயணம், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு அமைதியைக் கொணரும் என்ற நம்பிக்கை, கத்தோலிக்கர் மத்தியில் நிலவுகிறது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

புண்பட்டு சோர்ந்து, அந்த நினைவுகளில் உழலும் இதயங்களில் நம்பிக்கையை ஊட்டி, அதில் கிடைத்த அனுபவத்தால், அதேநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இதயங்களைத் தேற்றுவதற்கு உதவுகிறவர் இறைவன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

“நம்மை நினைத்துக்கொண்டிருக்கின்ற, காயமடைந்த நினைவுகளை, நம்பிக்கை எனும் எண்ணெய் தடவி குணப்படுத்துகின்ற, மனச்சோர்வுகளிலிருந்து விடுபட உதவுகின்ற இறைவன், நன்மைகள் புரியவும், துன்புறும் இதயங்களுக்கு ஆறுதலளிக்கவும் நமக்கு உதவுவாராக” என்ற சொற்கள், ஆகஸ்ட் 24, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மொசாம்பிக் திருத்தூதுப் பயணம்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்காக, அந்நாட்டு கத்தோலிக்கர் இறைவேண்டல்களை எழுப்பி வருகின்றனர்.

வருகிற செப்டம்பர் 4ம் தேதி புதன் காலையில் வத்திக்கானிலிருந்து, மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோ(Maputo)விற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லவிருக்கும்வேளை, மப்புத்தோ உயர்மறைமாவட்ட கத்தோலிக்கர், Ressano Garcia விண்ணேற்பு அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டு செபித்துள்ளனர்.

மப்புத்தோ உயர்மறைமாவட்ட துணை ஆயர் António Juliasse Ferreira Sandramo அவர்கள் தலைமையில், தலைநகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில், Ressano Garcia என்ற ஊரில், மலை உச்சியில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை மரியா திருத்தலத்திற்கு கத்தோலிக்கர் இத்திருப்பயணத்தை மேற்கொண்டனர்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டிற்கு அமைதியைக் கொணர வேண்டுமென்று, கத்தோலிக்கர் உருக்கமாகச் செபித்தனர்.   

வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல், 6ம் தேதி முடிய, மொசாம்பிக் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின், மடகாஸ்கர், மற்றும் மொரீஷியஸ் தீவு நாடுகளுக்கும் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, செப்டம்பர் 10ம் தேதி மாலை வத்திக்கான் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2019, 13:39