தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரை புதன் மறைக்கல்வியுரை  

திருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்

1999ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், எந்த திருத்தந்தையும் நாட்டிற்கு வருகை தரவில்லை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் ஆண்டவர் ஆற்றும் வியப்புக்குரிய செயல்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார். 

“தம்மை நீதிமான்களாக நம்புகின்றவர்களுக்கு அல்ல, மாறாக, தேவையில் இருப்பவர்கள் என, தம்மைப் பற்றி அறிந்து கொள்பவர்கள் மற்றும், ஆண்டவருக்கு தம் இதயங்களைத் திறப்பதற்கு நன்மனம் உள்ளவர்களுக்கு, ஆண்டவர் வியப்புக்குரியனவற்றைச் செய்கிறார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், பதிவாகியிருந்தன.

திருத்தந்தையை இந்தியாவிற்கு

இந்தியாவில், கத்தோலிக்கர் மட்டுமின்றி, நாட்டில் பெருமளவான மக்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பார்ப்பதற்கு பேரார்வத்தோடு உள்ளவேளை, இந்திய அரசு, அவரை, நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்க வேண்டுமென்று, மக்களவை உறுப்பினர் ஒருவர், கூறியுள்ளார்.

இவ்வாறு, மக்களவையில் பேசியுள்ள, இந்து மதத்தவரான மக்களவை உறுப்பினர் சுரேஷ் கொடிகுன்னல் அவர்கள், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், அமைதி, மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.

1999ம் ஆண்டு நவம்பரில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், எந்த திருத்தந்தையும் நாட்டிற்கு வருகை தரவில்லை என்பதையும், கொடிகுன்னல் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றது முதல், இந்தியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்ற தனது ஆவலை, பல கட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளார் என்று யூக்கா செய்தியிடம் கூறினார், கொடிகுன்னல். (UCAN)

இதற்கிடையே, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், நேரிடையாகவே, இவ்வேண்டுகோளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

02 August 2019, 15:11