தேடுதல்

Vatican News
கிறிஸ்தவ மறைசாட்சியம் கிறிஸ்தவ மறைசாட்சியம்  (AFP or licensors)

கிறிஸ்தவ மறைசாட்சிய வாழ்வின் மேன்மை

பேரரசர் வலேரியன், திருஅவையின் சொத்துக்கள் எங்கே என, புனித இலாரன்சிடம் கேட்டபோது, தனக்குப்பின் நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஏழைகளைச் சுட்டிக்காட்டினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“அடிப்படையில், கிறிஸ்தவ சாட்சியம் என்பது, இயேசு உயிரோடு வாழ்கிறார், அவரே வாழ்வின் இரகசியம் என்பதை மட்டுமே அறிவிப்பதாகும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

திருத்தொண்டரும் மறைசாட்சியுமான புனித இலாரன்ஸ் திருவிழாவான ஆகஸ்ட் 10, இச்சனிக்கிழமையன்று, கிறிஸ்தவ மறைசாட்சியம் பற்றி, ஹாஸ்டாக்குடன் (#StLawrenceMartyr), தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தொண்டர் புனித இலாரன்ஸ்

உரோம் நகரில், தொடக்ககால கிறிஸ்தவர்களுக்கு முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகள் சவால் நிறைந்ததாய் இருந்தன. அப்போதைய உரோமைப் பேரரசர் வலேரியன், அனைத்து கிறிஸ்தவ ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், திருத்தொண்டர்களைக் கைதுசெய்து கொலை செய்யுமாறு ஆணையிட்டார்.

கி.பி.258ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் நாள், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த திருத்தந்தை 2ம் சிக்ஸ்துஸ் அவர்கள் கொலை செய்யப்பட்டார். அப்போது திருத்தொண்டராகப் பணியாற்றிய இலாரன்ஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். திருஅவையின் சொத்துக்கள் அனைத்தும், இலாரன்ஸ் அவர்களிடம் இருப்பதை அறிந்த வலேரியன், அவற்றை மூன்று நாள்களுக்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், இலாரன்ஸ் அவர்களை விடுதலை செய்தான். விடுதலையான இலாரன்ஸ் அவர்களும், திருஅவையின் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு வழங்கினார்.

ஆகஸ்ட் 10ம் தேதி, பேரரசர் வலேரியன், திருஅவையின் சொத்துக்கள் எங்கே என, இலாரன்சிடம் கேட்டபோது, தனக்குப்பின் நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஏழைகளைச் சுட்டிக்காட்டினார் அவர். இதனால் கடுஞ்சினமடைந்த வலேரியன், இலாரன்ஸ் அவர்களைப் பிடித்து, இரும்புக் கட்டிலில் கிடத்தி, அதனடியில் தீ மூட்டும்படி ஆணையிட்டான். புனித இலாரன்ஸ் அவர்கள், சுடர்விட்டெழுந்த நெருப்பின் கொடுமையைப் பொறுத்துக்கொண்டே இறைவனைப் புகழ்ந்தார். பின்னர் அவர் அங்கு நின்ற அதிகாரியிடம், எனது உடல் நன்றாய் வெந்திருக்கின்றது, நீர் எடுத்து உண்ணலாம் என்று சொல்லி, மறைசாட்சி மரணத்தைத் தழுவினார்.

உரோமையில், வெரோனா பொதுக்கல்லறைத் தோட்டப் பகுதியில், பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்கள், மறைசாட்சி புனித இலாரன்ஸ் அவர்களுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். அது பின்னாளில் மிக அழகான பசிலிக்காவாக எழுப்பப்பட்டது.

10 August 2019, 15:37